பெரிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி பணியாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.. யஷ்வந்த் சின்ஹா
இப்போது பெரிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி பெரிய எதிர்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாறை நிறுத்த முடிவு செய்துள்ளன.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் பதவியை யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா செய்தார். இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா டிவிட்டரில், மம்தா ஜி அவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் எனக்கு வழங்கிய மரியாதை மற்றும் கவுரவத்திற்காக அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது பெரிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி பெரிய எதிர்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.

அவர் (மம்தா பானர்ஜி) இந்த நடவடிக்கையை ஆமோதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என பதிவு செய்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக யஷ்வந்த் சின்ஹா வரும் 27ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தியது தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், எதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருப்பது அவசியம் என தெரிவித்தார்.

