சரத் பவார் மகாராஷ்டிரா முதல்வராக இருந்திருந்தால் அரசாங்கத்தின் இமேஜ் வேறுவிதமாக இருந்திருக்கும்.. காங்கிரஸ்

 
யஷோமதி தாக்கூர்

சரத் பவார் மகாராஷ்டிரா முதல்வராக இருந்திருந்தால் மாநில அரசாங்கத்தின் இமேஜ் (மதிப்பு) வேறுவிதமாக இருந்திருக்கும் என காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பாராட்டி பேசியிருப்பது ஆளும் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சிகளுக்குள் அவ்வப்போது சிறு சிறு வார்த்தை மோதல்கள் நடந்தாலும் ஆட்சியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மகாராஷ்டிரா காங்கிரஸ் அமைச்சர் பாராட்டி பேசியிருப்பது கூட்டணிக்குள் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பவார்

மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸின் யஷோமதி தாக்கூர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: இன்று சரத் பவார் மகாராஷ்டிரா முதல்வராக இருந்திருந்தால் அரசாங்கத்தின் இமேஜ் (மதிப்பு) வேறுவிதமாக இருந்திருக்கும். சரத் பவார் மகாராஷ்டிராவில் நான்கு முறை முதல்வராக இருந்துள்ளார். ஆனால் இன்று தேவைப்படும் இந்த நேரத்தில் அவர் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் மீது எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், மகாராஷ்டிரா எப்போதும் நிலையாக இருக்கும். நீங்கள் வருவீர்களாக இல்லையா என்று இங்குள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருந்தது. 

சிவ சேனா

நீங்கள் எங்களை விட மூத்தவர், ஆனால் நீங்கள் சோர்வடையவில்லை. உங்களிடமிருந்து கற்றுக்கொள்வது மதிப்புக்குரியது. இன்று நீங்கள் எங்களுடன் இருப்பது எங்கள் அதிர்ஷ்டம். உங்கள் குடியிருப்பு மீது அவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் நீங்கள் இன்று இந்த நிகழ்வில் எங்களுடன் இருப்பது எங்கள் விதி. இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் அமைச்சரின் கருத்துக்கு சிவ சேனா பதில் கொடுத்துள்ளது. சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நீலம் கோரே டிவிட்டரில், சரத் பவாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது முழு இந்தியாவுக்கும் பயனளிக்கும். நீங்கள் (யஷோமதி தாக்கூர்) முன்மொழிவீர்களா? என்று பதிவு செய்து இருந்தார்.