‘’அந்த 15 ரூபாய் ஸ்டாலினுக்கு போகுதா? அவரது மருமகனுக்கு போகுதா?’’

அந்த 15 ரூபாய் ஸ்டாலினுக்கு போகிறதா? இல்லை அவரது மருமகன் சபரீசனுக்கு போகிறதா? அல்லது சின்னவர் உதயநிதி ஸ்டாலினுக்கு போகிறதா? என்று கேட்டு விட்டு சிரித்தார் எச். ராஜா.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா , வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜிஎஸ்டி விவகாரம் குறித்த கேள்வி எழுந்தது.
அதற்கு பதில் அளித்த எச். ராஜா, ’’ஜிஎஸ்டி பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினால் முறை தவறி பேசுகிறார். சட்டம் தெரியாமல் அவர் பேசுகிறார். ஒன்று அறியாமையில் பேசுகிறார். இல்லையென்றால் ஆணவத்தில் பேசுகிறார். இதற்கு எப்படி பாரத பிரதமர் மத்திய அரசு பொறுப்பேற்க முடியும்?’’ என்ற கேள்வியை எழுப்பியவர், ’’இவர்கள் பேசுவது பொறுப்பற்ற பேச்சு. ஜி. எஸ் டி வரி உயர்வு என்பது தரம் வாய்ந்த பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி போடப்பட்டிருக்கிறது. நடிகரை வைத்து நீங்கள் நாடு முழுவதும் விளம்பரம் செய்தீர்கள். அதற்கு இதுவரை வரி விதிப்பு செய்யவில்லை’’ என்றார்.
தொடர்ந்து அது குறித்து பேசிய ராஜா, ’’நூறு ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை 5% வரி உயர்வு செய்ததால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஏன் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது? அந்த 15 ரூபாய் ஸ்டாலினுக்கு போகிறதா? அல்லது அவரது மருமகன் சபரீசனுக்கு போகிறதா? இல்லை, சின்னவர் உதயநீதி ஸ்டாலினுக்கு போகிறதா?’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
‘’ யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு. வரி உயர்வு செய்தால் 105 ரூபாய்க்கு தானே இருக்க வேண்டும் . 15 ரூபாய் மக்கள் பணத்தை சுரண்டுகிறது ஸ்டாலின் அரசு. இது தமிழகத்தில் நடக்கும் கொள்ளை ’’என்று கடுமையாக விமர்சித்தார்.
அவர் மேலும் ஜிஎஸ்டி விவகாரம் குறித்து, ’’ஜிஎஸ்டி வரி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்’’ என்று சொன்னவர், ’’ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் கலந்துகொண்ட நிதித்துறை அமைச்சர் முதல் முறை வளைகாப்புக்கு சென்று விட்டார். இரண்டாவது முறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவுகளை யார் எடுக்கிறார்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில் தொடங்கியது முதல் இரண்டு கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. நம் நாட்டின் 32 விதமான வரிகள் இருந்தது. 32 வரிகளை ஒன்றாக ஆக்கி உள்ளோம் . 36 வகையான விலைகள் உள்ளன. இதனை நான்கு வகையில் கொண்டு வந்திருக்கிறோம். ஜிஎஸ்டி பற்றி மாநில கட்சி தலைவர்களோ மாநில முதலமைச்சர்களோ பேசுவதற்கு அருகதை இல்லை . 1200 வகையான உற்பத்தி பொருட்கள் உள்ளன . இவற்றில் அனைத்திற்கும் வரி விகிதத்தை பெரும்பான்மையுடன் பாஜகவோ அல்லது மோடியோ நிர்மலா சீதாராமனோ முடிவு செய்யவில்லை . கருத்து ஒற்றுமையுடன் கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் ஒருமித்த கருத்தோடு தான் முடிவு செய்யப்பட்டது’’ என்றார்.