பயங்கரவாதம் என்று சொல்லாதது ஏன்? முதல்வருக்கு பாஜக எழுப்பும் 6 கேள்விகள்

 
ச்ச்

கோவை சம்பவத்தில் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்  பயங்கரவாத செயல் என்று சொல்லாமல், கார் சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னதற்கு பாஜக 6 கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில் கொண்டு இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படும்.  மாநிலத்தின் பொது அமைதி, சட்டம்-ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

னி

இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயண் திருப்பதி,  கோவை பயங்கரவாத சம்பவத்தை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றி பரிந்துரைத்த  முதலமைச்சரின் உத்தரவை படிக்க நேர்ந்தது. அந்த முழு அறிக்கையிலும் 'கார் சிலிண்டர் வெடிப்பு' என்றே குறிப்பிட்டுள்ளது வியப்பையளிக்கிறது. எந்த இடத்திலும் பயங்கரவாத அல்லது தீவிரவாத செயல் போன்ற வார்த்தைகள் இடம்பெறாதது தமிழக அரசு  இந்த சம்பவத்தை காரில் சிலிண்டர் வெடித்த சாதாரண சம்பவமாக தான் கருதுகிறது என்பதை உரக்க சொல்கிறது என்கிறார். 

இது தொடர்பாக அவர் தமிழக அரசுக்கு 6 கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்த வழக்கை  என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற வேண்டியது எதற்காக?
ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்ததற்கு கோவை மாவட்ட பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்த வழக்கு என்று தமிழக அரசு கருதுமேயானால், மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டு தொடர்புகளும் வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு கருதுவதேன்?

ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்ததற்காக மூன்று காவல் நிலையங்களை கோவை நகரில் உடனடியாக அமைத்திட தேவை என்ன?
ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்ததற்காக ஒரு சிறப்பு படையினை உருவாக்க முடிவெடுத்தது  ஏன்?
ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்த வழக்கையடுத்து கூடுதல் உளவு பிரிவு அதிகாரிகள் நியமனம் ஏன்? 

ன

என்ற கேள்விகளை முன் வைத்துள்ள நாராயண திருப்பதி,   இது போன்ற 'சட்ட விரோத' செயல்களில் ஈடுபடுவோரை பற்றி நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார் முதல்வர். ஒரு மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கிற நிலையில் அதை 'பயங்கரவாத அல்லத தீவிரவாத செயல்' என்று குறிப்பிடாமல் மிகச் சாதாரணமாக சட்ட விரோத செயல் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல், வெடி பொருட்கள் போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு. 'சட்ட விரோதம், சிலிண்டர் வெடிப்பு' என்று கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் அறிக்கை.

நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக்கூடாது என்பதை முதல்வர் அவர்கள் உணர வேண்டும். நடந்திருப்பது படு பயங்கரமான திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை. கோவை மாநகரத்தில் தீபாவளி பண்டிகையின் போது பொது மக்கள் மீது நடைபெறவிருந்த  திட்டமிட்ட  மிக பெரிய தாக்குதல் நடவடிக்கை. எல்லாம் வல்ல இறைவன் அருளால் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 

இதை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டிய மாபெரும் கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை திமுகவின் அதிகாரப்பூர்வ  நிலைப்பாட்டினை, கண்டனத்தை வெளிப்படையாக தெரிவிக்காததிலிருந்தே இந்த அறிக்கை ஏன் மிக கவனமாக சில வார்த்தைகளை தவிர்த்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழகம் அமைதியான ஆன்மீக பூமி. இங்கே பயங்கரவாதத்திற்கு இடமில்லை. மத அடிப்படைவாதத்திற்கு இடமில்லை. அதே போல் போலி மதசார்பின்மைவாதிகளுக்கும் இடமில்லை என்கிறார்.