ஜெயக்குமாருக்கு ஏன் பதவி கொடுக்கல? சமாளித்த ஜெயவர்தன்

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜெயக்குமார். இதற்காக ஓபிஎஸ்ஐ இப்போது வரைக்கும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார் . எடப்பாடியை பெரிதும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் . ஆனால் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஜெயக்குமாறுக்கா? சி.வி சண்முகத்திற்கா? என்ற நெருக்கடி வந்த போது ஜெயக்குமாருக்கு கட்சியின் முக்கிய பதவி அதாவது அவைத்தலைவர் பதவி வழங்கப்படும் என்று சமாதானம் சொன்னதால், அவர் சிவி சண்முகத்திற்கு சீட் கொடுத்துவிட ஒப்புக் கொண்டார் என்று அப்போது தகவல் வெளிவந்தது . ஆனால் அந்த அவைத் தலைவர் பதவி தமிழ் மகன் உசேன் வசம் சென்றுவிட்டது. மிச்சம் இருக்கும் பொறுப்புகளுக்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பாளர்களை அறிவித்து விட்டார். இதில் ஜெயக்குமாருக்கு எந்த பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை.
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமியும், நத்தம் விஸ்வநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் பதவி எஸ். பி. வேலுமணிக்கு வழங்கி இருக்கிறார். அமைப்புச் செயலாளர்களாக சிவி சண்முகம், செல்லூர் ராஜு, ஆர். காமராஜ், ஓ. எஸ். மணியன் கடம்பூர் ராஜு , கேபி அன்பழகன் , தனபால், ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா , பாலகங்கா, பெஞ்சமின் ஆகிய 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன் விடுவிக்கப்பட்டு அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்த தமிழ் மகன் உசேன் அவை தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் ஜெயக்குமாருக்கு மட்டும் ஏன் பதவியை வழங்கவில்லை என்று கேள்வி எழுத்திருக்கிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்த்தன் சந்தித்து அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஜெயக்குமாருக்கு கட்சியின் முக்கிய பதவி கொடுக்கவில்லையே ஏன் என்ற கேள்விக்கு, ’’கட்சித் தலைமை தான் அது குறித்து முடிவெடுக்கும். ஆனால் அவர் ஏற்கனவே அமைப்பு செயலாளராக உள்ளார் என்று தெரிவித்தார்.
ஆனாலும் ஜெயக்குமாருக்கு கட்சியில் முக்கிய பதவி அறிவிக்கப்படாதது அவரது வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.