அண்ணாமலை வாட்ச் ரசீது ஏன் கர்நாடக காபி கடை ஓனரிடம் இருக்குது? - திமுக
அண்ணாமலையின் வாட்ச் 2021ல் வாங்கியது அல்ல; அது 2016ம் ஆண்டில் வாங்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் ஒரு காபி கடை உரிமையாளர் வாங்கிக்கொடுத்துள்ளார். அவரிடம்தான் வாட்சின் ரசீது உள்ளது என்கிறது திமுக.
பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்று கேட்டிருந்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
அவர் மேலும், வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? என்று கேட்டிருந்தார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள்,10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள். என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்’’என்று தெரிவித்திருந்தார்.
உடனே அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘’சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?’’என்று கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்த வாட்ச் 2016-லேயே வாங்கியதாகத் தகவல். பெங்களூர் சிட்டியில் அண்ணாமலை போலீஸ் உதவி கமிஷனராக இருந்தபோது, அங்கு ஒரு காபி நிறுவனத்துக்குப் பஞ்சாயத்து தீர்த்து வைத்ததற்குப் பரிசாகக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்!! என்ற தகவல் பரவுகிறது.
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தியும், ‘’கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்! தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்ல? அதையும் தாண்டி ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது!’’என்று தெரிவித்திருக்கிறார்.