காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்தது ஏன்?.. பின்னணியில் காங்கிரஸ் தலைவர்கள் மாறுப்பட்ட கருத்து..

 
பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸில் தனக்கு முழு சுதந்திரம் கிடைக்காது என்ற எண்ணம் போன்ற காரணங்களால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுத்து விட்டார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியும், காங்கிரஸின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் ஒரு பகுதியாக இருக்குமாறும், வரவிருக்கும் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் உத்திகளை கவனித்துக் கொள்ளுமாறும் ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்து விட்டார். 

பிரியங்கா, ராகுல்,சோனியா

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தை சாராத ஒருவரின் பெயரை பிரசாந்த் கிஷோர் முன்மொழிந்தார். ஆனால் பிறகு தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தியை தேர்வு செய்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தனித்து போட்டியிடவும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் கூட்டணி வைக்கவும் பிரசாந்த் கிஷோர் யோசனை தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த திட்டத்துக்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்டார் ஆனால் மற்ற தலைவர்கள் மாறுப்பட்ட கருத்து தெரிவித்தனர். 

காங்கிரஸ்

பிரசாந்த் கிஷோர் மற்ற அரசியல் கட்சிகளில இருந்து விலகி, தங்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என காங்கிரஜ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள், பிரசாந்த் கிஷோருக்கு கட்சியில் முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவில்லை. ஆனால் சுதந்திரமாக செயல்படுவது பிரசாந்த் கிஷோரின் பாணி.  திக்விஜய சிங் மற்றும் ஏ.கே. ஆண்டனி போன்ற தலைவர்கள் பிரசாந்த் கிஷோரால் குழப்பம் அதிகரிக்கும் என தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். மேலும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகளுக்கு பணியாற்றியுள்ளது. இதனால் ஐ-பேக் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து சில காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பினர்  என தகவல் வெளியாகியுள்ளது.