இபிஎஸ் உண்ணாவிரதத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது.. அமைச்சர் எ.வ.வேலு கமெண்ட்

 
எவ்

 கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறிவிட்டது திமுக அரசு என்று கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் வரும் இரண்டாம் தேதி கோவை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.  மின் கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு போன்ற விலைவாசி உயர்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வ்

 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  நடைபெற இருக்கிறது இந்த போராட்டம்.  இதை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பி. வேலுமணி. 

 இந்த நிலையில் அதிமுகவின் இந்த போராட்டம் குறித்து விமர்சித்துள்ளார் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு.  கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு நடந்தது.  அமைச்சர் வேலூர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.  

அமைச்சர் வேலு பேசியபோது,  அதிமுகவின் போராட்டம் பற்றிய செய்தியை பத்திரிகையை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.   இந்த போராட்டத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது.   10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தியவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம்.  நாங்கள் வந்து ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது.  தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இந்த போராட்டம் நடத்துகிறார்கள்.  அவர்கள் போட்ட சாலை தவறான சாலை.  அதற்காக அவர்களே போராடுகிறார்கள் என்றார்.

 அவர் மேலும்,  கோவையில் இரண்டு பாலங்கள் பணியில் உள்ளன.  மார்ச் மாதத்திற்குள் பாலத்தின் பணிகள் முடிந்து விடும்.  எட்டு வழி சாலை திட்டம் கொள்கை முடிவு. சாலை போடப்படுமா இல்லையா என்பதை முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும்.  மதுக்கரை முதல் மேட்டுப்பாளையம் வரையிலும் புறவழிச் சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் சரியாகும்.  அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.  டெண்டர் விடப்படும் என்றார்.

 தொடர்ந்து பேசிய அமைச்சர்,    மேட்டுப்பாளையம், காரமடை, பைபாஸ் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.  இதன் மூலமும் நெரிசல் குறைக்கப்படும் என்றார்.