அங்கே குண்டர்களுக்கு என்ன வேலை? முதல்வருக்கு செல்லூர் ராஜூ கேள்வி
ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் மதுரை மேயர் அலுவலத்தில் என்ன வேலை? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவர் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
மதுரை மேயர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசிய செல்லூர் ராஜூ, ‘’மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை திமுகவினர் தாக்கி இருப்பது வரலாற்று பிழை’’ என்றார்.
மேலும், ‘’ திமுகவினர் அராஜகம் செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சில நாட்களிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மாநகராட்சி அலுவலகத்தின் நிர்வாகத்தில் தலையிட்டு அதிகார அத்துமீறலில் ஈடுபடுகிறார்.’’என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர் அதுகுறித்து, ‘’ மதுரையில் திமுக பிம்பம் மாறி இருக்கிறது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்னார் . ஆனால் அவர் தேர்வு செய்த மேயரின் அலுவலகத்திலேயே குண்டர்கள் புகுந்து அராஜகம் செய்கிறார்கள்’’என்றவர், ‘’மேயர் அலுவலகத்தில் ரவுடிகளுக்கும் தொண்டர்களுக்கும் என்ன வேலை?’’ என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பினார்.
‘’திமுகவினரின் மனமும் குணமும் மாறாது’’என்று விமர்சித்தவர், ’’திமுகவிற்கு ஓட்டளித்த அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுக்கும் வகையில் தான் செயல்பட்டு வருகிறது அரசு. மக்கள் விரோத அரசாக திமுக இருக்கிறது’’ என்றும் தெரிவித்தார்.