என்ன லாஜிக் பேசுகிறார் பழனிசாமி? வேட்டி அவிழும் போது முண்டாசுவை முறுக்கிக் கட்டினானாம்... திமுக விளாசல்

 
pl

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு அதிமுகவின் ஆதரவை நேரில் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி,  ’’சமூக நீதி பற்றி பேசும் திமுக திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை?’’என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி.  ’’கட்டியிருக்கும்  வேட்டி  கழன்று  விழும்  போது  முண்டாசுவை  முறுக்கிக்  கட்டினானாம்  ஒருவன்.  அந்த நிலைமையில்    இருக்கும்    பக்கோடா  பழனிசாமி,  திமுகவுக்கு திராவிட மாடல் க்ளாஸ் எடுக்கக் கிளம்பி இருக்கிறார்’’என்று சாடியிருக்கிறது அந்த கட்டுரை.

pp

அதில் மேலும்,  ’’பாஜக   சார்பில்   பழங்குடியினத்தைச்   சேர்ந்தஒருவரை     குடியரசுத்     தலைவர்     வேட்பாளராக அறிவித்து விட்டதாம்.  உடனே  தன்னை  சமூக நீதிக்காவலராக அவரே சொல்லிக் கொள்கிறார் பழனிசாமி.   பாஜக  சார்பில்  பாபா  ராம்தேவ்  சாமியாரை அறிவித்து  இருந்தாலும்  சாஷ்டாங்கமாக  தனக்கே தெரிந்த  ஒரே  ஒரு  தரை  டிக்கெட்  திறமையால்  வரவேற்புக்  கொடுத்திருப்பார் பழனிசாமி’’என்றும் கடுமையாக சாடுகிறது அந்த கட்டுரை.

தொடர்ந்து அதுகுறித்து,   ‘’பாஜக  தனது  பம்மாத்து  நீலிக்கண்ணீர்  அரசியலுக்குப்  பலியாடாக  ஒருவரை அறிவித்திருக்கிறது. அந்தக் கூட்டணியின் தொங்கு சதையாக இருக்கும் பழனிசாமி  அதிமுக  அதனை  ஆதரிக்கிறது.  அது  அவர்களின்  கொத்தடிமை  தர்மம். பழனிசாமியைக்   கேட்டுவிட்டு  பழங்குடியின      வேட்பாளரை     பாஜக அறிவிக்கவுமில்லை.  பாஜக.  சார்பில்  பழங்குடியினத்தைச்  சேர்ந்த  ஒருவரைத்தான்  குடியரசுத்   தலைவராக   ஆக்க   வேண்டும்   என்று   பழனிசாமி   கோரிக்கை வைக்கவுமில்லை.    ஏனென்றால்  அவரே  அவரது  சொந்த  நாற்காலியில்  உட்கார  முடியாத  அளவுக்கு நரக  வேதனையை  அனுபவித்து  வருபவர்’’என்று விமர்சிக்கும் அந்த கட்டுரையில்,  எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவும் அதில் நடந்த களேபரமும் குறித்து, 

tp

’’கோடிகளைக்  கொட்டி   அவராக  சிலரை ஒரு  கல்யாண  மண்டபத்திற்கு  வரவைத்து  அவர்கள்  தான்  பொதுக்குழு உறுப்பினர்கள்  என்று  சொல்லி    அரைமணி    நேரத்தில்    அதிமுக பொதுச்செயலாளராக  ஆக  நினைத்ததில்  மண்ணைப்  போட்டுவிட்டார்  பன்னீர்.   ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே செல்லாதபதவி. அந்தச் செல்லாத பதவியை தானே ராஜினாமா செய்து இப்போதைக்கு அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு திமுகவின் திராவிட மாடல் குறித்துப் பேச அருகதை இல்லை.   அவருக்குத்  தெரிந்தது  எல்லாம்  ’மண்புழு மாடல்’ மட்டும் தான்’’என்கிறது அந்த கட்டுரை.

’’ஜெயலலிதா, சசிகலா,  தினகரன் வரிசையில்  இப்போது  பாஜக பழனிசாமி  விழுந்தே கிடக்கிறார்.  கால்கள்  தான்  மாறிக்  கொண்டே  இருக்கும்.  இந்தத்  தற்குறிகளுக்கு  திமுகவின் பழைய வரலாறுகள் தெரியாது.கே.ஆர்.நாராயணன் யார்?மீராகுமார்  யார்?  -  அவருக்கு  இவர்களைத்  தெரியாது.  முத்தமிழறிஞர்  கலைஞரால்  முன்மொழியப்பட்டு  குடியரசுத்  தலைவராக  ஆக்கப்பட்டவர்கள்.   பழனிசாமி,  இப்படி  யாரையும்  பரிந்துரைக்க  வில்லை.  பாஜக  சொன்னதற்கு தலையாட்டி இருக்கிறார்.

இந்த பொம்மைகளுக்கு திராவிட மாடல் புரியாது.  யார்  நிறுத்தப்படுகிறார்கள்  என்பதல்ல  பிரச்சினை?  எந்த  தத்துவத்தின் பிரதிநிதியாக  நிறுத்தப்படுகிறார்  என்பதே  முக்கியம்’’ என்று சொல்லும் அந்த கட்டுரையில்,   ‘’வி.பி.சிங் மிக உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை ஆதரித்தது சமூக விரோத காரியமாக ஆகிவிடுமா என்ன? என்ன லாஜிக் பேசுகிறார் பழனிசாமி. மீண்டும்  சேலம்  மாவட்ட  அதிமுக செயலாளர்  பதவியாவது  கிடைக்குமா  எனப்பார்க்கவும். சமூகநீதி, திராவிட மாடல் எல்லாம் பெரியவங்க பேச வேண்டிய சமாச்சாரம் சாமீ!’’என்று எடப்பாடியை விளாசி எடுத்திருக்கிறது.