கவர்னருக்கு பதிலாக முதல்வர் பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமனம்.. மேற்கு வங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்..

 
ஜெகதீப் தங்கர்

கவர்னருக்கு பதிலாக முதல்வரை (மம்தா பானர்ஜி) பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமனம் செய்வதற்கான மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2022 அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் அண்மையில், கவர்னர் மாளிகை அனுமதியின்றி மாநில அரசு பல துணைவேந்தர்களை நியமித்துள்ளதாக கவர்னர் ஜகதீப் தங்கர் குற்றம் சாட்டியிருந்தார். மேற்கு வங்கத்தில் தற்போது உள்ள அரசு நடத்தும் 17 பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர் வேந்தராகவும் உள்ளார்.

மம்தா பானர்ஜி
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க அமைச்சரவை கூட்டத்தில் மாநில கவர்னருக்கு பதிலாக முதல்வரை (மம்தா பானர்ஜி) அனைத்து அரசு பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு மாநில சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்படும் என மாநில அரசு தெரிவித்து இருந்தது. இதன்படி, மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு, மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2022ஐ தாக்கல் செய்தார்.

பிரத்யா பாசு

மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது, முதல்வர் வேந்தராக பதவியேற்பதில் எந்த தவறும் இல்லை. பிரதமர் மத்திய பல்கலைக் கழகத்தின் வேந்தராக இருந்தால், மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வர் ஏன் இருக்க முடியாது. தற்போது வேந்தராக உள்ள கவர்னர் (ஜகதீப் தங்கர்) பல்வேறு சந்தர்ப்பங்களில் நெறிமுறைகளை மீறியிருக்கிறார் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் இந்த மசோதா மீது தீவிர விவாதம் நடந்தது. அதன் பிறகு இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு 182 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். 40 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.