மேற்கு வங்க கவர்னருக்கு அடுத்த ஷாக்.. தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக கல்வி அமைச்சர்.. மசோதா நிறைவேற்றம்..

 
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் கவர்னருக்கு பதிலாக மாநில கல்வி அமைச்சரை தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக நியமிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டப்பேரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் அண்மையில், கவர்னர் மாளிகை அனுமதியின்றி மாநில அரசு பல துணைவேந்தர்களை நியமித்துள்ளதாக கவர்னர் ஜகதீப் தங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடுப்படைந்த முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அவரது அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் முதல் படியாக கவர்னருக்கு பதிலாக முதல்வரை (மம்தா பானர்ஜி) பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமனம் செய்வதற்காக சட்டத்தை நிறைவேற்றியது.

ஜெகதீப் தங்கர்
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க அமைச்சரவை கூட்டத்தில் மாநில கவர்னருக்கு பதிலாக முதல்வரை (மம்தா பானர்ஜி) அனைத்து அரசு பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு, மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2022ஐ தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு 182 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். 40 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

திரிணாமுல் காங்கிரஸ்

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கவர்னருக்கு பதிலாக மாநில கல்வி அமைச்சரை தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக நியமிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டப்பேரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக கவர்னரை மாற்ற வழிசெய்யும் மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2022  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ததால், அவையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.