முகுல் ராய் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தான்.. மேற்கு வங்க சபாநாயகர் உறுதி

 
முகுல் ராயை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யாமல் விட மாட்டோம்.. பா.ஜ.க.

பா.ஜ.க.விலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினாலும் முகுல் ராய் பா.ஜ.க. எம்.எல்.ஏ.தான் மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர் என தெரிவித்தார்

திரிணாமுல் காங்கிரஸில் இருந்த முகுல் ராய் கடந்த 2017ல் அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணாநகர் உத்தர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். இந்நிலையில் பா.ஜ.க. மீதான அதிருப்தி காரணமாக கடந்த 2021 ஜூன் மாதத்தில் அந்த கட்சியிலிருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

சுவேந்து ஆதிகாரி

இதனையடுத்து, மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான சுவேந்து ஆதிகாரி, முகுல் ராயை முதலில் பி.ஏ.சி. தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும்,இரண்டாவதாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக, முகுல் ராய் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வா இல்லையா என்பது குறித்து மறுஆய்வு செய்யுமாறு மேற்கு வங்க சட்டப்பேரவையின் சபாநாயகரிடம் கல்கத்தா உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. 

 பீமன் பானர்ஜி

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர்  பீமன் பானர்ஜி கூறுகையில், இந்த வழக்கை முடிப்பதற்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் எனக்கு ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளது. மனுதாரர் (சுவேந்து ஆதிகாரி) மனுவில் அவரது வாதத்தை ஆதரிக்கும் தாக்கல் செய்த மின்னணு ஆதாரங்களின் உள்ளடக்கத்தை நிரூபிக்க தவறிவிட்டார் என்பதை நான் தெளிவாக கருதுகிறேன். 11.2.22 அன்று நான் முன்பு கூறிய முடிவை (முகுல் ராய் பா.ஜ.க. எம்.எல்.ஏ.) உறுதி செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை என தெரிவித்தார்.