அண்ணாமலையின் மிரட்டலுக்கு நாங்க பயப்பட மாட்டோம் -அமைச்சர் ஐ. பெரியசாமி ஆவேசம்

 
i

அண்ணாமலையின் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். முதலில்  அவர் முதுகை அவர் திரும்பி பார்க்கட்டும் என்று ஆவேசமாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஐ. பெரியசாமி .

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோட்டனூத்து பகுதியில் கட்டப்பட்டு வரும் அகதிகள் முகாமில்  மரக்கன்றுகள் நடப்பட்டன.   கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  

பெ

 பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அப்போது அவரிடம்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் இரண்டு பேரின் ஊழல்பட்டியல் தன்னிடம் உள்ளதாக சொல்லி வருவது பற்றிய கேள்வி எழுப்பியப்போது,  ’’ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சொல்வதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.  அண்ணாமலையின் மிரட்டலுக்கும் நாங்கள் பயப்பட போவதில்லை.  எந்த துறையிலும் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை.   அண்ணாமலை முதலில் அவர் முதுகினை திரும்பி பார்க்கட்டும்.  அதற்குப்பின்னால் அடுத்தவரை பற்றி குறை சொல்ல வரட்டும்’’ என்றார் ஆவேசமாக.

 தொடர்ந்து அது குறித்து பேசிய ஐ. பெரியசாமி,  ’’ ஊழல் குற்றச்சாட்டு என அண்ணாமலை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை.  ஊழல் நடந்திருக்கிறது என்றால் விசாரணையில் அதனை நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும்.   தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்கள் திமுகவினரை அதிக அளவில் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு உயர் பதவிகளை கிடைக்கும் . அப்படித்தான் எல் .முருகன் இணை அமைச்சர் பதவியில் உள்ளார்.  தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக உள்ளார். அதேபோல் அண்ணாமலை மத்திய அரசில் ஏதேனும் பதவி வேண்டும் என்பதற்காகவே திமுகவை விமர்சித்து வருகிறார்’’ என்று குற்றம் சாட்டினார்.