இதுக்கு பின்னால் இருக்கும் அரசியல் எங்களுக்கு தெரியும்!புரியும்! - அமித்ஷாவுக்கு திமுக பதிலடி
அமித்ஷாவும் அன்னைத் தமிழும் என்கிற தலைப்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி நாளிதழில் தலையங்க கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதில், மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஹிந்தியில் பேசும் பிரதமர் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவதும், இந்தியை தான் இந்தியா முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் தமிழ் கற்பிக்க வேண்டாமா? என்று கேட்க வைத்ததும்தான் தமிழ்நாட்டில் சாதனை என்கிறது
மேலும் அந்த கட்டுரையில், இந்தியை நேரடியாக திணித்தால் ஹிந்தி பேசாத மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், உங்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்கிற போர்வையில் ஆங்கிலத்தை அகற்றுவதும், ஆங்கிலம் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடத்தில் ஹிந்தியை கொண்டு வந்து வைப்பதும் தான் ஒற்றை மொழி கொள்கை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது அந்த கட்டுரையில்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அதைத்தான் இங்கேயும் வந்து சொல்லிச் சென்றிருக்கிறார். தமிழ் மொழியை வளர்ப்பதும் பாதுகாப்பதும் தேசத்தின் பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார். தமிழ் வளர்ச்சிக்கும் சமஸ்கிருத வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகையை பார்த்தாலே இவர்கள் தங்கள் பொறுப்பை எந்த லட்சத்தில் செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்.
மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் கற்றுத் தர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. பொறியியல் படிப்பு தமிழ்நாட்டில் தமிழில் கற்றுத் தரப்படுகிறது என்பது கூட அவருக்கு யாரும் சொல்லவில்லை. இது பற்றிய விரிவான விளக்கத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்திருந்தார். மருத்துவ படிப்பை தமிழில் படிக்க தேவையான பாட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை அரசு தொடங்கி நடத்தி வருவதையும் அமைச்சர் பொன்முடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இன்றைக்கு அல்ல 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் அனைத்து பாட நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதற்கான தொடர்புகள் முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் 1970 காலகட்டத்தில் அனைத்து தொழில் கல்வி பாட புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. 900-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவை. இந்த புத்தகங்கள் இப்போது திமுக ஆட்சி மாறுந்ததும் மீண்டும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன . தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி கல்வி தாய் மொழியில் கற்பிக்கப்படுகிறது.
அறிவியல் கலை கல்லூரிகளில் தாய் மொழியில் படிக்கலாம். பொறியியல் கல்லூரிகளில் தாய் மொழியில் படிக்கலாம். ஆராய்ச்சியை தாய் மொழியில் நடத்தலாம். அரசின் சார்பிலான அனைத்து போட்டித் தேர்வுகளும் தாய் மொழி எழுதலாம். அனைத்து தகுதி தேர்வும் தாய் மொழியில் எழுதலாம். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வில் தமிழ் தகுதித்தாள் என்பதை முதல்வர் ஸ்டாலின் கட்டாயமாக்கி இருக்கிறார்.
இத்தகைய ‘தமிழ்’ அரசுக்குத்தான் அமைச்சர் அமித்ஷா அறிவுரை சொல்கிறார். இந்த அறிவுரைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலை உணராதது அல்ல தமிழ்நாடு. எங்களுக்கு எல்லோர் வேடமும் தெரியும்! புரியும்! என்று முடிகிறது அந்த கட்டுரை.’’