முதுகு, இடுப்பை 2 அடி வளைத்துதான் திமுக தலைவர்களை கட்சியினர் சந்திக்க முடியும் - பாஜக விளாசல்

முதுகு, இடுப்பை இரண்டடி வளைத்துதான் திமுக தலைவர்களை கட்சி தொண்டர்கள் சந்திக்க முடியும் என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன். அவர் மேலும், உண்மையான சமூக நீதி சுயமரியாதை இருக்கின்ற கட்சி பாஜகதான் என்றார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அதுகுறித்து மேலும், பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் . அவர் வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடந்த பாஜக தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் பாலசந்தர் கொலையை கண்டிக்கின்றோம்.
பிரதமர் வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்து உள்ளதால் இது ஒரு அச்சுறுத்தலாக இருக்குமோ என்று தெரிகிறது. கொலையாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய சீனிவாசன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்பது நாசகார சக்திகளுக்கு உற்சாகம் தருவது போல் இருக்கிறது தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மாநில மாவட்ட நிர்வாகிகள் அமைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது.
சமூக நீதியை நிலைநாட்டும் பாஜக பிறப்பின் அடிப்படையில்தான் தலைவரை நியமிக்கிறது என்றார். திமுகவில் அந்தந்த மா.செ.க்கள் தங்களின் தந்தையோடும், மகன்களின் படங்களுடன் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அமைச்சர்கள் கூட மகன்களின் படங்களோடுதான் போஸ்டர் ஒட்டுகிறார்கள். தமிழகம் முழுவதுமே முதல்வர் ஸ்டாலின் படத்தோடு உதயநிதி படத்தையும் போடுகின்றார்கள் என்று விமர்சித்தவர், உண்மையான சமூக நீதி சுயமரியாதை இருக்கின்ற கட்சி பாஜகதான். திமுகவில் முதுகு ,இடுப்பு இரண்டு அடி வளைத்துதான் கட்சி தொண்டர்கள் தலைவரைச் சந்திக்க முடியும் என்று விமர்சித்தார்.