நம்மைக் காத்த கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன் - அண்ணாமலை
நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன் என்று அறிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவை மாவட்டத்தில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரே கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 .10 மணியளவில் கார் ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபின் என்கிற வாலிபர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரைக்கும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சதி வேலையா என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. முபின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்கள் 100 கிலோவுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்’’என்று அறிவித்திருக்கிறார்.