வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது - விஜயபாஸ்கர் வருத்தம்

 
vb

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தன்னை குற்றவாளி என்று கூறியிருப்பது குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.  இன்று புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த விளக்கத்தினை அளித்திருக்கிறார்.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுந்த புகாரினை அடுத்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை அரசிடம் சமர்ப்பித்தது.  இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

aru

 இந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்,  சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்று கூறப்பட்டிருந்தது . இது பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.    இது குறித்து தான் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார் விஜயபாஸ்கர்.

 ஆணையத்தில் என்னை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் ஒருதலைபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார் விஜயபாஸ்கர். அவர் மேலும்,   எங்களை பொறுத்த வரைக்கும் அதிமுகவில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இழந்த துக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஆணையத்தின் அறிக்கை வெந்த பொண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

 மேலும்,  மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள் இதை சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசி சட்டப்படி எதிர்கொள்வோம்.  நேர்மையோடும் முறையாக நெஞ்சத்தில் தூய்மையோடும் எதிர்கொள்வேன்  என்றும் அழுத்தமாக கூறியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

 ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.