"ஆளுநருக்கு அதிகாரமே இல்லை" - சிறப்பு விவாதத்தில் வேல்முருகன் ஆவேசம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் விலக்கு மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பிவைத்தது. இதனை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்காமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்ட ஆளுநர், பிப்ரவரி 3ஆம் தேதி சட்டப்பேரவைக்கே திருப்பியனுப்பினார். இதன்பிறகு 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. அந்த வகையில் ஆளுநரின் விளக்க கடிதம் குறித்து சபாநாயகர் அப்பாவு விவரித்தார். அதற்கு பின் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து சிறப்பு விவாதத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், "சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில், தமிழக சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையது அல்ல. 8 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட மசோதாவை ஆளுநர் சட்டப்பிரிவு 224-ன் படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதுவே அவருடைய கடமை. மத்திய அரசுப் பட்டியலிலோ, பொதுப்பட்டியலிலோ இருக்கும் விவகாரம் தொடர்பான மசோதாவை மீண்டும் மாநில அரசுக்கே அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு என்ற நடவடிக்கையால்தான் இன்று கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கிறதே தவிர, நீட் தேர்வால் அல்ல. நீட் தேர்வு என்றால் அச்சம். அதனால்தான் ஆண்டுதோறும் பதிவு செய்துவிட்டு சுமார் 2 லட்சம் மாணவர்கள் வரை தேர்வைப் புறக்கணிக்கின்றனர். ஆகவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்” என்றார்.