"திமுகவுக்கு மான பிரச்சினை.. எங்களை மிரட்டுகிறார்கள்" - புகார்களை அடுக்கிய வானதி சீனிவாசன்!

 
வானதி சீனிவாசன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரபர கிளைமேக்ஸை நெருங்கி கொண்டிருக்கிறது. நாளையோடு பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜகவினரும் அதிமுகவினரும் ஆளும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வாக்குகளைச் சேகரிக்கின்றனர். மேலும் திமுக தேர்தலை நேர்மையாக நடத்தவிடாமல் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

Junior Vikatan - 28 March 2021 - தேர்தலுக்கு பிறகு கமல் அரசியலில் தொடர்வது  சந்தேகம்! - வானதி சீனிவாசன் ஆரூடம் | Coimbatore south BJP candidate vanathi  srinivasan interview - Vikatan
 
அப்போது அவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவரும் சூழலில், கோவையின் பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். புகார் தெரிவித்த பிறகு, அவர்கள் காலதாமதமாக சம்பவ இடத்துக்கு வந்து சேர்கின்றனர். மாநகராட்சியின் 70-வது வார்டில் நேரடியாக கையும், களவுமாக பணம் அளித்தவர்களை பிடித்து ஒப்படைத்தோம்.

கோவை மாவட்டத்தில் உள்ள திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி  பிரச்சாரம் செய்து வருகிறார் - evidenceparvai

அப்போதும் கூட அவர்கள்மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருசில இடங்களில் பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு காவல்துறையினரே உறுதுணையாக இருப்பதாக கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். கோவையில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத திமுக, இந்தத் தேர்தலில் தங்கள் மானப் பிரச்சினையாக கருதி இந்த மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வெளியூர் ஆட்கள், உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.  எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தேர்தல் ஆணையம் வெளியேற்ற வேண்டும்" என்றார்.