இதுக்காக கொந்தளிக்கும் திமுக அதை ஒருமுறை படித்து பார்க்க வேண்டும் - வானதி சீனிவாசன்

 
na

தமிழக ஆளுநர் ஆர்,என். ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம்  மனு அளிக்கப்பட்டுள்ளது.   ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதியிடம்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.   ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்டி வந்தன. இதனால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி .ஆர். பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கடிதம் இன்று  குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது .

a

இதுகுறித்திஉ பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ’’தி.மு.க.வுக்கு ஆளும் கட்சியாக இருக்கும்போது தான், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதெல்லாம் நினைவுக்கு வரும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னாரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் மூலம், அன்றைய அ.தி.மு.க. அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை மக்கள் மறந்திருப்பார்கள் என தி.மு.க.வினர் நினைக்க வேண்டாம்’’ என்கிறார்.

அவர் மேலும்,   ‘’ஆளுநர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர். எனவே, ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிதான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கென வகுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

"சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கிலான, மத ரீதியான கருத்துகளை பொதுவெளியில் ஆளுநர் பேசி வருகிறார். மக்கள் மனங்களில் வெறுப்பைத் தூண்டி, சமூக பதற்றத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுகள் அமைந்துள்ளன. திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும், தமிழ்ப் பெருமையையும் விமர்ச்சித்து வருகிறார்" என்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

a

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறளில் உள்ள குறைகளை, விமர்சன கண்ணோட்டத்தோடு விமர்சிப்பது எப்படி மதச்சாயம் பூசுவதாகும் என்பது தெரியவில்லை. திருக்குறளில் இந்து மதம் வலியுறுத்தும் அறம், பொருள், இன்பம் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ பாதிரியார் ஜி.யு.போப், அதிலுள்ள 'ஆன்மிகம்' என்ற 'ஆன்மா'வை தவிர்த்து விட்டார் என ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த விமர்சனத்திற்காக கொந்தளிக்கும் தி.மு.க.வினர், திருக்குறள் பற்றி, பெரியார் ஈ.வெ.ரா. கூறியதை ஒருமுறை படித்து பார்க்க வேண்டும்’’என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதன்படியே அவர், பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அதில், தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லையெனில், 'கருத்துக்கு கருத்து' என்று, ஜனநாயக ரீதியில் பதில் அளிக்கலாம். அதைவிடுத்து அவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோருவதன் மூலம், தி.மு.க.வுக்கு ஜனநாயக வழியிலான கருத்து பரிமாற்றத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது என்று சொல்லும் வானதி,  

தி.மு.க. அரசுக்கு தனது விருப்பம் போல செயல்பட முடியவில்லை. எல்லா உண்மைகளையும், தவறுகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார். அதனை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், தி.மு.க.வினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். தமிழகத்தின் நலன், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளுநர் மீது வெறுப்பை கக்காமல், மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் நலனுக்காக அவருடன் தி.மு.க. அரசு இணைந்து செயல்பட வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, தமிழக மக்களின் விருப்பமும் இதுதான் என்கிறார்.