வைகோவை தூக்கி எறிந்தோம்; எம்.ஜி.ஆர். போனப்பவே கவலைப்படல - ஆர்.எஸ்.பாரதி தடாலடி

 
mg

திமுகவிலிருந்து யார் போனாலும் அதை பற்றி கவலை இல்லை . வைகோவை தூக்கி எறிந்தோம்.  எம்ஜிஆர் போன போதும் கவலைப்படவில்லை என்று தடாலடியாக தெரிவித்திருக்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி.  திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சியாய் இருந்த வரைக்கும் அக்கட்சியில்  இருந்து நிறைய பேர் விலகி மாற்று கட்சிகளுக்கு சென்றனர்.  பாஜகவிற்கும் சென்றனர்.  ஆனால் திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது அதுவும் கட்சியின் மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகன் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்து இருக்கிறார் ஆர். எஸ். பாரதி.

 சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் தந்தை இந்திரனின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் ஆவடி சாமு நாசர்,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சேகர் பாபு,  தயாநிதி மாறன் எம்பி,  திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

rs

 இதன் பின்னர் ஆ.ர். எஸ் பாரதியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.   தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசத்திற்கு முதலில் தடை விதித்திருந்த தமிழக அரசு பின்பு தடையை நீக்கியதற்காக ஆன்மீக அரசு என்று ஆதீனங்கள் சொன்னது குறித்த கேள்விக்கு,   ’’பல்லாக்கு அனுமதி விஷயத்தில் எது நியாயமோ எது ஏற்றதோ எதை சமுதாயம் ஏற்குமோ அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்திருக்கிறார்’’என்றார்.

  திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்ற திருச்சி சிவாவின் மகன்  சூர்யா சிவா குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு,   அவர் அதிகம் குற்றம் சாட்டும் நபர் சசிகலா புஷ்பா .  அந்த சசிகலா புஷ்பா தான் இப்போது அதே பாஜகவில் துணைத் தலைவராக இருக்கிறார்.  இதைப்பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை’’ என்றார்.

 பாரம்பரியமிக்க கட்சியான திமுகவிலிருந்து ஒருவர் எதிரணியான பாஜகவிற்கு சென்றுவிட்டாரே என்ற கேள்விக்கு,   ‘’எம்ஜிஆர் கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை.  வைகோவை தூக்கி எறிந்தோம்’’ என்று சொன்னவர்,  ‘’ திமுக தேம்ஸ் நதி மாதிரி.  யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலை இல்லை.  தேம்ஸ் நதி போன்று 70 வருடம் திமுக ஓடிக் கொண்டிருக்கிறது.  இன்னும் நூறு ஆண்டுகள் ஓடும்’’ என்றார் .