கேரளாவில் மார்க்சிஸ்ட், காங்கிரஸூக்கும் இடையிலான மோதலால் சாமானிய மக்கள் அவதி.. வி.முரளீதரன்

 
வி.முரளீதரன்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸூக்கும் இடையிலான மோதல் காரணமாக சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என மத்திய அமைச்சர் வி.முரளீதரன் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்துக்குள் சில மர்ம நபர்கள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். ராகுல் காந்தியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய மாணவர் கூட்டமைப்பினரே (எஸ்.எப்.ஐ.) காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

எஸ்.எப்.ஐ. தொண்டர்களால் தாக்கப்பட்ட ராகுல் காந்தி அலுவலகம்

கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்புதான் எஸ்.எப்.ஐ. என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக இதுவரை எஸ்.எப்.ஐ. தொண்டர்கள் 19 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அதேசமயம், ராகுல் காந்தி அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸூக்கும் இடையிலான மோதல் காரணமாக சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் குற்றம் சாட்டினார்.

பினராயி விஜயன்

மத்திய அமைச்சர் வி.முரளீதரன் இது தொடர்பாக கூறியதாவது: கேரளாவில் அமைதியை நிலைநாட்டுவது பினராயி விஜயன் அரசின் கடமை. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையேயான மோதலுக்கு மத்தியில், சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை கடினமாக விட்டது. அமைதியை நிலைநாட்டுவது அரசு மற்றும் ஆளும் கட்சியின் கடமை. முதல்வர் பினராயி விஜயன் அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அவரால் அமைதியை ஏற்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.