ஊடகங்களில் தேவைற்ற கருத்துக்களை தெரிவித்த உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம்..

 
ஹரிஷ் ராவத், அகில் அகமது

உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் (நேற்று முன்தினம் வரை) அகில் அகமது. 2022 உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் வாக்குறுதி அளித்ததாக அகில் அகமது  தெரிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் மாநிலத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. 

ஹரிஷ் ராவத்

ஆனால் நான் அப்படி (முஸ்லிம் பல்கலைக்கழகம்) எதுவும் கூறவில்லை, அகில் அகமது கூறியது நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்  என்று ஹரிஷ் ராவத் தெரிவித்தார். மேலும் ஹரிஷ் ராவத் பேஸ்புக்கில், தேர்தல் தோல்விக்கு பிறகு சில காலமாக சமூக வலைத்தளங்களில் காரணம் இல்லாமல் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பா.ஜ.க. ஆதரவாளர்களை தவிர்த்து, எங்கள் தலைவர்களில் ஒருவருடன் தொடர்புடைய சிலரும் என் மீது சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். என்னை தரையில் எறியவும், கொல்லவும் இதை ஒரு வாய்ப்பாக அவர்கள் நினைக்கிறார்கள் என்று பதிவு செய்து இருந்தார். முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் தோல்விக்கு அகில் அகமதுவின் அறிக்கையும் ஒரு காரணம் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ்

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை, ஊடகங்களில் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்ததற்காக உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் அகில் அகமது கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை அகில் அகமதுக்கு அனுப்பிய நோட்டீஸில், 2022 பிப்ரவரி 8ம் தேதியன்று கூட உங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டது. இருந்தபோதிலும், நீங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகிறீர்கள். மத்திய தலைமை இதை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீங்கள் கட்சி உறுப்பினர் பதவியில்  இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்யப்படுகிறீர்கள் இது உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.