உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவு.. முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு

 
பொது சிவில் சட்டம்

உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் ஒரு குழு (நிபுணர்கள்) அமைக்கப்பட்டு மாநிலத்தில் பொது சிவில் சட்டம் செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது.  பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் அரசின் இந்த அறிவிப்பை பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஆர்.பி.சிங் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக ஆர்.பி. சிங் டிவிட்டரில், சட்டம் அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது வாக்குறுதியை காப்பாற்றுகிறார் என்று பதிவு செய்துள்ளார். நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுததும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் என்று புஷ்கர் சிங் தாமி கூறியிருப்பது முரணானது. ஏனென்றால் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மற்றொரு மாநிலமான கோவாவில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது. 

ஆர்.பி.சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க. 47 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. தேர்தலில் தோற்றபோதிலும், உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைவராக புஷ்கர் சிங் தாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமையன்று உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்றார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட முதல் முக்கிய அறிவிப்பு மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்பது குறிப்பிடத்தக்கது.