முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. காவலாளியாக இருந்து சேவை செய்யும்.. உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா
பஸ்மாண்டா முஸ்லிம்களுக்கு நாங்கள் (பா.ஜ.க.) காவலாளியாக இருந்து சேவை செய்வோம் என்று உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் லக்னோவில் பாஸ்மாண்டா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வசதி செய்வதற்காக பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கேசவ் பிரசாத் மவுரியா பேசுகையில் கூறியதாவது:
சமாஜ்வாடி கட்சியையும், சில சமயங்களில் பகுஜன் சமாஜ் கட்சியையும், சில சமயங்களில் காங்கிரஸையும் வாக்களித்து பலப்படுத்தினீர்கள். உங்களின் ஒத்துழைப்பால் அரசியலில் உயர் மட்டத்தை அடைந்தார்கள். இந்த கட்சிகள் உங்களுக்காக என்ன செய்தன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களை பா.ஜ.க.வில் இருந்து விலக்கி வைக்க இந்த கட்சிகள் விஷத்தை பரப்புகின்றன.
மற்ற கட்சிகள் வேண்டுமென்றே பஸ்மாண்டா சமூகத்தை பின்தள்ளியது. வாக்களிக்கும் போது, யாரோ ஒருவர் வெறுப்பூட்டும் அறிக்கைகள் மூலம் உங்கள் வாக்குகளை பெறுவார், பின்னர் உங்களை பரிதாபத்தில் விட்டு விடுவார். ஆனால் நாங்கள் (பா.ஜ.க.) உங்கள் காவலாளியாக இருந்து உங்களுக்கு உண்மையிலேயே சேவை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.