தீண்டத்தகாத கட்சியாக இருந்த பா.ஜ.க.வை காப்பாற்ற தேவதூதர்கள் போல் ஜார்ஜ்-நிதிஷ் வந்தனர்.. உபேந்திர சிங் குஷ்வாஹா

 
பா.ஜ.க.

தீண்டத்தகாத கட்சியாக இருந்த பா.ஜ.க.வை காப்பாற்ற  தேவதூதர்கள் போல் ஜார்ஜ்-நிதிஷ் வந்தனர் என்று பா.ஜ.க.வுக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் உபேந்திர சிங் குஷ்வாஹா பதிலடி கொடுத்தார்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகியதையடுத்து, பா.ஜ.க. தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக பா.ஜ.க. தலைவர்கள் சுஷில் குமார் மோடி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோர், நிதிஷ் குமாரை பல முறை மத்திய அமைச்சராக்கியதுடன், ஐக்கிய ஜனதா தளத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவரை முதல்வராக்கியதற்கும் அவர் பா.ஜ.க.வுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என அண்மையில் கூறினர். இந்நிலையில்,  நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணையும் என்று சுஷில் குமார் மோடி கிண்டல் செய்து இருந்தார்.

உபேந்திர சிங் குஷ்வாஹா

இது ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா பேஸ்புக்கில் பதிவில் கூறியிருப்பதாவது: இந்த கருத்து (ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணையும்) ஆட்சேபனைக்குரியது மட்டுமல்ல, அவமானகரமானது. 1995-96க்கு முன்பு பா.ஜ.க. ஒரு தீண்டத்தகாத கட்சியாக கருதப்பட்டது. ஏனெனில் எந்த அரசியல் கட்சியும் அவர்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. பின்னர் சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் பா.ஜ.க.வை காப்பாற்ற தேவதூதர்கள் போல வந்தனர். 

நிதிஷ் குமார்

பா.ஜ.க.வின் மும்பை அமர்வில் கலந்து கொண்டு சமதா கட்சியுடன் கூட்டணி அமைத்தனர். பா.ஜ.க. அப்போது தீண்டத்தகாதவர் என்பதில் இருந்து தீண்டத்தகுந்ததாக மாறியது. ஜார்ஜ்-நிதிஷ் கருணை காட்டாமல் இருந்திருந்தால், இன்று உங்களை (பா.ஜ.க.) பற்றிய எந்த தடயமும் இருந்திருக்காது. நன்றியின்மையின் எல்லைகள் கடந்து விட்டன. பா.ஜ.க. தலைவர்கள் 1995-96 வரையிலான இந்த வரலாற்றை அவர்களிடம் ஏதேனும் நன்றியுணர்வு இருந்தால் நினைவுகூர வேண்டும். நாட்டின் வரலாற்றை பா.ஜ.க. மாற்ற முயல்கிறது என்பது நாடு முழுவதும் தெரியும். பிறகு சொந்த கட்சியின் வரலாற்றை மறந்தால் என்ன பெரிய விஷயம். இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார்.