விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது.. காங்கிரஸ் பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
பிரகலாத் ஜோஷி

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.

நாடாளுமன்றத்தில் பணவீக்கம், பெட்ரோல் விலை உயர்வு, பாக்கெட் தயிர் போன்ற உணவு பொருட்கள் மீதான வரி விதிப்பு போன்ற பிரச்சினைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் நேற்று நாடாளுமன்றம் முடங்கியது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், இன்று (நேற்று) காலை மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள்  விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் மீதான அர்த்தமற்ற ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறித்து அவசர விவாதம் நடத்த கோரியது. இது மறுக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் பிடிவாதம் தொடர்கிறது. நாடாளுமன்றத்தில் அலுவல் பாதிக்கப்பட்டது என பதிவு செய்து இருந்தார். 

ஜெய்ராம் ரமேஷ்

ஆனால் இதனை அரசு மறுத்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், ஆனால் அரசு ஏற்கவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது என்பதை உறுதியாக  தெளிவுப்படுத்துகிறேன் என தெரிவித்தார். முன்னதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு போதும் கேள்வி கேட்கவில்லை, ஆனால் எப்போதும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவமதிப்பவர். 

ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் 40 சதவீதத்துக்கும் குறைவான வருகையை வைத்திருப்பவர் அவர். இன்று அரசியல் ரீதியாக பலனளிக்காத நபர் நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை என்பதை உறுதிப்படுத்த தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். நாடாளுமன்ற நடைமுறைக்கு அவமரியாதை காட்டுவதில் முழு அரசியல் வரலாற்றையும் கொண்ட ஒரு மனிதர். மக்களவையின் உற்பத்தி திறனை குறைக்க பிடிவாதமாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.