மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 45 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.. மத்திய பா.ஜ.க. அமைச்சர்

 
நிசித் பிரமானிக்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 45 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என மத்திய பா.ஜ.க. அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸூக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மிதுன் சக்கரவர்த்தி, சுகந்தா மஜூம்தார் உள்பட பல பா.ஜ.க. தலைவர்கள் அடிக்கடி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என கூறி வருகின்றனர். தற்போது பா.ஜ.க. எம்.பி. நிசித் பிரமானிக்கும் அதே போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான நிசித் பிரமானிக் பேசுகையில் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸின் அடித்தளம் மிகவும் பலவீனமாகி விட்டது. அது புதை மணல் போன்றது மற்றும் அட்டை வீடு போல் இடிந்து விழும். இதை நாங்கள் நன்றாக புரிந்து கொள்கிறோம்ஃ மேற்கு வங்கத்தினரும் புரிந்து கொள்கின்றனர். 40 முதல் 45 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். வரும் நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுவேந்து ஆதிகாரி

மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான சுவேந்து ஆதிகாரி அண்மையில், மாநிலத்தில் திரிணாமுல் அரசாங்கம் அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடிக்க முடியாது. 2024ம் ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடியாக திரிணாமுல் காங்கிரஸ், எங்கள் எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு இல்லை என்று கிண்டலாக தெரிவித்தது.