பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் எத்தனை முறை வந்தாரு சொல்லுங்க?.. காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
கர்தாபூர் வரும் மன்மோகன் சிங்,  அமரீந்தர் சிங்குக்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுங்க- பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததை விமர்சனம் செய்த காங்கிரஸூக்கு, பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் எத்தனை முறை அனைத்து கட்சி கூட்டத்துக்கு வந்தாரு என்று சொல்லுங்க என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது எடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததை காங்கிரஸ் விமர்சனம் செய்தது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு வழக்கம் போல் பிரதமர் வரவில்லை. இது நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது இல்லையா? என பதிவு செய்து இருந்தார்.

பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்துக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் அவர் பிஸியான கால அட்டவணையில் இருக்கிறார் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது பிரச்சாரத்தில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார். அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி வராததை குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

பிரகலாத் ஜோஷி

அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ்  கேள்வி எழுப்பினார். 2014-க்கு முன்பு, பிரதமர் (முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்) அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். மன்மோகன் சிங் எத்தனை முறை அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்? என்று தெரிவித்தார்.