சிவ சேனா தனது நிறத்தை அவ்வப்போது மாற்றி வருகிறது.. உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்த மத்தியமைச்சர்

 
சிவ சேனா

சிவ சேனா தனது நிறத்தை அவ்வப்போத மாற்றி வருகிறது என உத்தவ் தாக்கரேவுக்கு மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பதிலடி கொடுத்தார். 


சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் நிகழ்சி ஒன்றில் பேசுகையில், இன்று ராம நவமி. ராமர் பிறந்திருக்கவில்லை என்றால், பா.ஜ.க.வினர் அரசியலில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில்  என்ன பிரச்சினையை எழுப்பியிருப்பார்கள்  என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனவே அவர்கள் (பா.ஜ.க.) அரசியலில் வகுப்புவா பிரச்சினைகளை முன்னணியில் வைத்திருக்கிறார்கள். இந்துத்துவாவை விட்டு சிவ சேனா விலகி விட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறுகின்றனர். அது உண்மையல்ல. நாங்கள் பா.ஜ.க.வை விட்டு வெளியேறி விட்டோம். இந்துத்துவா மீதான காப்புரிமையை பா.ஜ.க. கொண்டிருக்கவில்லை. பா.ஜ.க. மட்டுமே இந்துத்துவாவை குறிக்காது. போலி இந்து இதய சக்கரவர்த்தியை உருவாக்க பா.ஜ.க. முயன்றது. ஆனால் மக்கள் ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பதிலடி கொடுத்தார். ராவ்சாகேப் பாட்டீல் தன்வே கூறியதாவது: பா.ஜ.க. அல்ல,  சிவ சேனா ராமரின் பெயரில் அரசியல் செய்கிறது. எங்களின் பங்கு எப்போதும் இந்துத்துவாவுக்காக போராடுவதுதான். சிவ சேனா அதன் காப்புரிமையை விற்று விட்டது, நாங்கள் அல்ல. சிவ சேனா தனது நிறத்தை அவ்வப்போது மாற்றி வருகிறது. நாட்டில் அவசர நிலை ஏற்பட்டபோது, அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர். குடியரசு தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி முன்மொழியப்பட்டபோது, அவர்கள் (சிவ சேனா) அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

ராவ் சாகேப் தன்வே

நாங்கள் (பா.ஜ.க.) தேர்தல் சின்னத்தை மட்டுமே மாற்றினோம், அவர்கள் (சிவ சேனா) தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளனர். இந்துத்துவாவை நாங்கள் ஒருபோதும் கைவிடவில்லை. ஜனசங்கம் இருந்த போதும் இல்லை, இப்போது பா.ஜ.க. இருந்தபோதும் இல்லை. ஆம், காலப்போக்கில் சின்னத்தை மட்டுமே மாற்றியுள்ளோம். ராமர் பிறக்கவில்லை என்றால் பா.ஜ.க. என்ன பிரச்சினையை கிளப்பும் என்று உத்தவ் தாக்கரே கூறுகிறார். இந்த கேள்வி நமக்கு (பா.ஜ.க.) மட்டுமல்ல, அனைவருக்கும் எழுகிறது. இவர் இந்துத்துவாவை கைவிட்டு விட்டார். இப்போது அதில் (இந்துத்துவா) அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.