டம்மி குடியரசு தலைவர் என்று கிண்டலடித்த காங்கிரஸ்.. திரௌபதி முர்முவை அவமதிப்பதை நிறுத்துங்க.. கிரண் ரிஜிஜூ பதிலடி

 
கிரண் ரிஜிஜூ

பா.ஜ.க.வின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை மறைமுகமாக டம்மி என காங்கிரஸ் விமர்சனம் செய்ததற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிருகிறார். இந்நிலையில் பா.ஜ.க.வின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை டம்மி என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸின் டிவிட்

புதுச்சேரி காங்கிரஸ் பிரிவு டிவிட்டரில், ஆளும் பா.ஜ.க. குடியரசு தலைவராக ஒரு டம்மியை விரும்புகிறது, அதேநேரத்தில் அவர்கள் எஸ்.சி./எஸ்.டி. சமூகத்தை ஏமாற்ற விரும்புகிறார்கள் என பதிவு செய்து இருந்தது. இருப்பினும் சிறிது நேரம் கழித்து டிவிட்டை புதுச்சேரி காங்கிரஸ் நீக்கி விட்டது. திரௌபதி முர்முவை டம்மி என மறைமுகமாக புதுச்சேரி காங்கிரஸ் கூறியதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

திரௌபதி முர்மு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ டிவிட்டரில், புதுச்சேரி காங்கிரஸ் பதிவு செய்து டிவிட்டை ஷேர் செய்து, டம்மி என்பதன் அர்த்தம் என்ன? காங்கிரஸ் கட்சி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பி.ஏ.சங்மா மற்றும் பல மரியாதைக்குரிய எஸ்.சி./எஸ்.டி.  தலைவர்களை அவமதித்தது. இப்போது முன்னாள்  முன்னாள் கவர்னர், முன்னாள் அமைச்சர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு ஜியை அவமதிப்பதை நிறுத்துங்கள். மேலும் அவர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து அர்ப்பணிப்பு மற்றும் பக்தி மூலம் உயர்ந்துள்ளார் என பதிவு செய்துள்ளார்.