இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றியில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது... மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

 
ஜிதேந்திர சிங்

எதிர்வரும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி (2017ம் ஆண்டுக்கு முன்பு வரை)  நடந்ததால் பிரதமர் மோடியின் திட்டங்கள் இமாச்சல பிரதேசத்துக்கு தாமதமாக சென்றடைந்தன. 2014ம் ஆண்டு மத்தியில் மோடியின் ஆட்சி அமைந்ததை நாம் பார்த்தோம். ஆனால் 2017ல் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த  பிறகுதான்  மத்திய அரசின் பல திட்டங்கள் இமாச்சல பிரதேசத்தை அடைந்தன. உதாரணமாக உஜ்ஜவாலா திட்டம் வந்து அதன் பலன் நாடு முழுவதும் சென்றடைந்தது. ஆனால் அது 2017ம் ஆண்டுக்கு பிறகு தான் இமாச்சல பிரதேசத்தை அடைந்தது. இப்போது உஜ்ஜவாலா  திட்டத்தின் பலன் 1.37 லட்சம் குடும்பங்களை சென்றடைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தபோது அப்போது காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அப்போது அதனை அவர்கள் எதிர்க்கவில்லை, வரவேற்றனர். 

காங்கிரஸ்

2013 முதல் 2017 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் அவர்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால்  தற்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அதை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆகவே அவர்களிடம் ஏன் முன் கூட்டியே கொண்டு வரவில்லை என்று கேட்க வேண்டும்.  இப்போது அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் தான் பா.ஜ.க.வுக்கு சவால் விடும் வகையில் இந்த விவகாரத்தை எழுப்பி உள்ளனர். முந்தைய அரசுகள் செய்த தவறுகளை திருத்தும் பொறுப்பை ஏற்று செயல்படும் கட்சி பா.ஜ.க.. மக்கள் இதைப் பற்றி பேச விரும்பினால், பா.ஜ.க. தலைமை அவர்களிடம் பேசும். மோடி ஜி, ஜெய்ராம் ஜி இருக்கும் வரை  இந்த விஷயத்தில் முன்னேறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். 

பா.ஜ.க.

இமாச்சல பிரதேசத்தில் 5 பா.ஜ.க. கிளர்ச்சி தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை அசாதாரணமான சூழ்நிலை என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பா.ஜ.க. ஒழுக்கமான கட்சி. அவ்வப்போது கவனத்தில் கொண்டு தலைமை முடிவுகளை எடுக்கிறது. அப்படித்தான் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தல்களை பொறுத்தவரை நமது பலமான வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். எங்கள் தொண்டர்கள் விடாமுயற்சியுடன் வேலை செய்கிறார்கள். இதை தவிர வேறு வேட்பாளர்கள் நின்றால் அது ஜனநாயகத்தில் இயல்பான விஷயம். இதைப்பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு இருப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இங்கு எங்கும் ஆம் ஆத்மி இல்லை. பா.ஜ.க.வின் வெற்றியில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. இது வெறும் பா.ஜ.க. தொண்டனாக மட்டும் இல்லாமல், சாமானியர்களின் உணர்வின் அடிப்படையிலும் உள்ளது. பா.ஜ.க.வால் மட்டுமே தங்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை சாமானியர்கள் புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.