இந்த முறையும் குஜராத்தில் கெஜ்ரிவாலுக்கு பாடம் புகட்டப்படும்... மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

 
கஜேந்திர சிங் ஷெகாவத்

இந்த முறையும் குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாடம் புகட்டப்படும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று முன்தினம் குஜராத் சென்றனர். அங்கு சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று பார்வையிட்டனர் மேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றனர்.  இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலின் போது குஜராத்தில் மக்களை கவர முயன்றார், அந்த தேர்தல் முடிவுகள் தற்போது அனைவருக்கும் முன்பாக வெளியாகியுள்ளது. இந்த  முறையும் குஜராத்தில் கெஜ்ரிவாலுக்கு பாடம் புகட்டப்படும். மற்ற மாநிலங்களில் முன்னேற வேண்டும் என்ற அவரது லட்சியங்கள் நசுக்கப்படும். தனக்கு சுய சான்றிதழ் வழங்குவது எளிது. ஆனால் டெல்லியில் உள்ள மக்களின் நிலை என்ன என்று கேட்க வேண்டும். டெல்லியில் உள்ள மருத்துவர்களிடம் அவர்களின் நிலை மற்றும் மொஹல்லா கிளினிக்குகளின் நிலை பற்றி கேட்க வேண்டும். 

ஆம் ஆத்மி

சுயசான்றிதழ் வழங்குவதும், இல்லாததை காட்டி ஊடகங்களில் பணத்தை விரயம் செய்வதும், பொதுமக்களிடம் இருந்து கள யதார்த்தத்தை மறைப்பதும் அடங்கிய கெஜ்ரிவால் சிந்தனை பள்ளி குறித்து பொதுமக்கள் மெல்ல மெல்ல அறிந்து வருகின்றனர். பஞ்சாப் வந்து சில நாட்கள்தான் ஆகிறது. அவர்கள் பஞ்சாபில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஊழலில் ஈடுபட்டு, முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அரசாங்கத்துக்கு சொந்தமான பணத்தை தவறாக பயன்படுத்தினர். பஞ்சாப் முடிவுக்காக காத்திருந்தோம். குஜராத் தேர்தல் நேரத்தில், அவர்களின் (ஆம் ஆத்மி) பஞ்சாப் அரசாங்கம் அதன் 6வது மாதத்தில் இருக்கும். அந்த நேரத்தில் பஞ்சாபில் மக்கள் வழங்கிய சான்றிதழ் முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.