எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்குமாறு தலைமைக்கு யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்
என் மீதுள்ள அன்பின் காரணமாக எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கிவிட வேண்டாம் என எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கி சிறப்பிக்க தஞ்சை மத்திய மாவட்டம், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதனையறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீது முன்னெடுப்புகள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக் உரியவனாக இருப்பேன். கழகம் வழங்கிய வாய்ப்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களின் தேவைகளை கண்டறிந்து அதற்குரிய தீர்வு காண மக்கள் பணியையும் கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞரணி செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து பணியையும் என்னால் இயன்றவற்றை சிறப்பாக ஆற்றி வருகிறேன்.
கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடலுடன் பாசறை கூட்டங்கள் நடத்துவது நலத் திட்டப் பணிகளில் ஈடுபடுவது என பல பலவற்றுக்கும் ஆன பயணங்களுக்கு தயாராகி வருகிறேன். இந்த சூழலில் என் மீதுள்ள அன்பின் காரணமாக எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கி விட வேண்டாம் என உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும், தலைமையும் நன்கு அறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம். எனவே பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அவர்களின் வழியில் வந்த நம் கழக தலைவர் அவர்கள் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம்! மக்கள் பணியாற்றுவோம்! கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழை சேர்த்திடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.