"இதுதான் அந்த 'நீட்' ரகசியம் எடப்பாடியாரே" - ஓபனாக போட்டு உடைத்த உதயநிதி!

 
எடப்பாடி உதயநிதி

நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சியான அதிமுக துணைநிற்கிறது. ஆனால் அவ்வப்போது ஆளும் திமுகவை உரசி பார்க்கிறது. மத்தியில் திமுக-காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் கொண்டுவரப்பட்டதாக எடப்பாடியும் சரி ஓபிஎஸ்ஸும் சரி தொடர்ந்து புகார் வாசிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் விரும்பாத மாநிலங்கள் விலக்கு பெறுவதற்கான அம்சம் இருந்தது. அதனைக் கொண்டு தமிழ்நாட்டுக்கு திமுக விலக்கு பெற்றது. இதனை இருவரும் எளிதாக மறந்துவிடுகின்றனர்.

குறிப்பாக பாஜக அரசு தான் நீட் தேர்வை கட்டாயமாக்கியது என்பதையும் சொல்ல மறுக்கின்றனர். நீட் விலக்குக்கு ஆதரவளிக்காவிட்டால் தமிழக மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே நீட் விவகாரத்தில் அரைகுறையாக விமர்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. பாஜகவையும் திருப்திப்படுத்த வேண்டும், நீட் விலக்குக்கும் ஆதரவளிக்க வேண்டும் என இரட்டை நிலைப்பாட்டில் அதிமுக சவாரி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இச்சூழலில் சில நாட்களுக்கு முன் நீட் விவகாரத்தில் உதயநிதியை எடப்பாடி விமர்சித்தார்.

Tamilnadu Pay Tribute To NEET Petitioner Anitha On Fourth Death Anniversary  | அனிதாவின் இழப்பு.. நான்காம் ஆண்டு நினைவு.. சமூகவலைதளங்களை நனைக்கும்  கண்ணீர்..!

சட்டப்பேரவை தேர்தல் சமயம் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அனிதாவின் பெயரை உச்சரித்தார் உதயநிதி. அனிதாவை கொன்றது மோடி, ஓபிஎஸ், இபிஎஸ் தான் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க திமுகவிடம் ரகசியமான ஐடியா இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டி விமர்சித்த எடப்பாடி, "உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக சொன்னார். அந்த ரகசியத்தைப் பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?" என்றார்.

தற்போது அந்த ரகசியம் என்னவென்று உதயநிதி பிரச்சார கூட்டத்தில் ஓபனாக போட்டுடைத்துள்ளார். கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், "நீட் தேர்வு ரத்துக்கான சட்டப்போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பிய ஒரு வாரத்திற்குள் மீண்டும் நீட் தேர்வு ரத்து மசோதாவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பியிருக்கிறோம். இது அதிமுக அடிமை அரசு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. நீட்  ரகசியத்தை இங்கு சொல்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம்" என்றார்.