உதயநிதி பேச்சில் திடீர் மாற்றம்.. ஓ அப்படியா விஷயம் - விரைவில் அறிவிப்பாமே!

 
உதயநிதி

தாத்தாவின் பேவரைட் தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி அமோக வெற்றிபெற்றார். எம்எல்ஏவாக சார்ஜ் எடுத்த கையோடு தொகுதிக்குள்ளேயே மின்னல் வேகத்தில் ஒரு ரவுண்ட் அடித்தார். அடடா இப்படி ஒரு எம்எல்ஏவா என அந்த தொகுதி மக்களே வியந்து பாராட்டினர். இது எதற்கான அச்சாரம் என்பதை மக்களும் தெரியாவதவர்கள் அல்ல. அரசியல்வாதிக்கெல்லாம் அரசியல்வாதிகள் நம் மக்கள் அல்லவா. இப்படியாக ரவுண்ட் அடித்த உதயநிதி மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தாத்தாவின் சுயசரிதை நூலின் பெயரையே படத்திற்கும் தலைப்பிட்டு அந்தப் படத்தில் நடித்து கொண்டிருந்தார். 

இப்போது ஓரளவு படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இச்சூழலில் மீண்டும் அரசியல் அரங்குக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் அடித்தளம் போட்டார். அதாவது உதயநிதி அமைச்சராவது மக்களின் விருப்பம் என தடாலடியாக ஒரு போடு போட்டார். அவர் போட்ட கோட்டில் இன்னபிற அமைச்சர்களும் ரோடு போட்டு விஷயத்தை பெரிதாக்கினர். இவ்வளவு ஏன் தோழமைக் கட்சியான காங்கிரஸுக்குள்ளேயே அவ்வளவு பிரச்சினை இருக்கிறது. அந்தக் கட்சிக்காரர் ஒருவரே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் எனக்கூறி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதமே எழுதிவிட்டார்.

மனைவி கிருத்திகா உடன் வாக்கு செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!

ஆனால் ஸ்டாலினோ மௌனமாகவே இருக்கிறார். மற்றொரு புறம் உதயநிதியை அமைச்சராக்குவதற்கான நாளை துர்கா ஸ்டாலின் குறித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குப் பின் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என சொல்லப்பட்டது. இவ்வாறு பல்வேறு தகவல்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள சூழலில், உதயநிதியின் மனதில் என்ன இருக்கிறது என்பதும் அவசியம் தானே. அதனை அவரிடம் செய்தியாளர்கள் இன்று ஓபனாகவே கேட்டுவிட்டனர். தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து அவர் வாக்களித்தார். 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சர் குறித்தான கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், "எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை பற்றி நான் பேச முடியாது. திமுக தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். அமைச்சர் பதவி ஒருவேளை கொடுக்கப்பட்டால் அப்போது பேசிக்கொள்ளலாம். முடிவு எடுக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலின்தான்" என்றார். இவ்வளவு நாளாக அமைச்சர் பதவி மீதே ஆசையே இல்லை என கூறிக்கொண்டிருந்த உதயநிதி, இன்று "ஒருவேளை கொடுக்கப்பட்டால்" என க்க் வைத்து பேசியிருக்கிறார். இதனை விரைவில் அமைச்சராவதற்கான அறிகுறியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.