பா.ஜ.க. தனது அரசியல் நலன்களுக்காக இந்துத்துவாவை பயன்படுத்துகிறது... உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
எனது சிவ சேனா இந்துத்துவாவுக்காக அரசியல் ஈடுபடுகிறது ஆனால் பா.ஜ.க. தனது அரசியல் நலன்களுக்காக இந்துத்துவாவை பயன்படுத்துகிறது என்று உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், சிவ சேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெற்கு மும்பையில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் சிவ சேனா தொண்டர்கள் மத்தியில் உத்தவ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: எனது சிவ சேனா இந்துத்துவாவுக்காக அரசியல் ஈடுபடுகிறது ஆனால் பா.ஜ.க. தனது அரசியல் நலன்களுக்காக இந்துத்துவாவை பயன்படுத்துகிறது.
முந்தைய கிளர்ச்சிகளை போலல்லாமல், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சிவ சேனாவை என்றென்றும் அழித்து விடும். எங்களை எதிர்கொள்வதற்கு அவர்கள் தொழில்முறை நிறுவனங்களை நியமித்துள்ளனர். இது பணத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையேயான போர். ஜூலை 27ம் தேதியன்று (நாளை) 62வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன், அன்று எனக்கு பூங்கொத்துக்களை வழங்க வேண்டாம், அதற்கு பதிலாக கட்சியை நம்புவதாகவும், மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக சேர உதவுவதாகவும் உறுதிமொழி பத்திரங்களை அனுப்புங்கள்.
அவர்கள்தான் (ஏக்நாத் ஷிண்டே குழு) அசல் சிவ சேனா என்று கூறி இப்போது இந்திய தேர்தல் ஆணையத்திடமும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நமக்கு வெறும் வீரியம் மட்டுமல்ல, உறுதியான ஆதரவும், கட்சி உறுப்பினர்களாக மக்களை பதிவு செய்வதும் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.