சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை எங்க கட்சி ஏற்கவில்லை... உத்தவ் தாக்கரே விளக்கம்

 
வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை எங்க கட்சி ஏற்கவில்லை என்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே  தெரிவித்தார். 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது மகாராஷ்டிராவில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவின் ஹிங்கோலி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தன்னை மன்னித்து  சிறையில் இருந்து விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தார். வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றார், காங்கிரஸூக்கு எதிராக வேலை செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் படையில் சேர்ந்தார் என்று தெரிவித்து இருந்தார்.

ராகுல் காந்தி

வீர் சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சுதந்திர போராட்ட வீரரை பற்றி வெட்கமின்றி பொய் கூறியதாக ராகுல் காந்தியை பா.ஜ.க. கடுமையாக சாடியது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், இந்துத்துவா சித்தாந்தவாதிகளை அவமதிக்கும் மக்களுக்கு மகாராஷ்டிரா மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸின் கூட்டணி கட்சியான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா ராகுல் காந்தியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக கூறுகையில், வி.டி. சாவர்க்கர் மீது எனது கட்சிக்கு அபரிமிதமான மரியாதை உள்ளது. சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை ஏற்கவில்லை என தெரிவித்தார்.

சாவர்க்கர்

அதேசமயம், ராகுல் காந்தி நேற்றும் சாவர்க்கரை தொடர்ந்து விமர்சனம் செய்தார். மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி ஊடகத்தினரிடம் பேசுகையில், ஒன்று சாவர்க்கரின் பார்வை, மற்றொன்று மகாத்மா காந்தியின் பார்வை (தொலைநோக்கு). இந்த இரண்டு பார்வைகளுக்கும் இடையே நாட்டில் சண்டை இருக்கிறது. நாங்கள் எல்லா வழிகளிலும் முயற்சித்தோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் பேச முயற்சித்தோம், எஞ்சிய ஒரே வழி பயணம் (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்), நீங்கள் பயணத்தை நிறுத்த விரும்பினால் அதை நிறுத்த முயற்சி செய்யுங்கள். என்று தெரிவித்தார்.