ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராவதற்கு உதயநிதி தயாராக உள்ளார் - அமைச்சர் போட்ட வெடி
![us](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/dccf8733c65fa0c7da14c5b0e52d45e9.jpg)
திமுகவின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னை -சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏ ஆனதும் அவர் அமைச்சராகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகவில்லை. இதனால் அவர் சென்னை மேயராக போகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் அதுவும் இல்லாமல் போனது.
அன்பில் மகேஷ் உட்பட அமைச்சர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வந்தார்கள். அமைச்சரவை விரிவாக்கத்தில் இது நிகழும் என்ற பேச்சும் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறப் போகிறது. அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என்ற பேச்சு பரபரப்பாக இருந்த நிலையில், அமைச்சரவை உருவாக்கும் இன்னும் நடைபெறவில்லை.
திமுகவினர் பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், ஸ்டாலினுக்கு பின்னர் முதல்வராவதற்கு உதயநிதி தயாராக உள்ளார் என்று அடுத்தகட்டத்திற்கு சென்றுவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகள் ஸ்டாலின் தான் முதல்வராக இருப்பார். நமது முதல்வர் நல்ல முதல்வர். ஒவ்வொரு குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். டெல்லிக்கு பயப்படாத தலைமை எனது தலைமை என்று பெருமை பேசினார்
தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போல அவருக்கு பின்னர் உதயநிதி முதல்வராக பொறுப்பேற்பதற்கு தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் இருவரும் பல்வேறு சிரமங்களை தாண்டி தான் மேலே வந்தார்கள் என்று சொல்லி திமுகவிற்குள் சலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.