"ஆமா நான் பிராமின் தான்.. கெத்தா சொல்வேன்" - துணை முதல்வரின் பேச்சால் சலசலப்பு!
"பாஜகவை பொறுத்தவரை அது பிராமணர்களுக்கான ஒரு கட்சி. ஆனால் இந்து என்ற மதப் போர்வையில் இருந்துகொண்டு வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பிறகு மறைமுகமாக பிராமணர்களின் நலனுக்காகவே முழுக்க முழுக்க செயல்படுகிறது" என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதற்கேற்ப பாஜகவின் செயல்பாடுகளும் அமைந்துவிடுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை கொணடுவரும் போதும் சரி நீட் தேர்வை கட்டாயமாகிய போதும் சரி இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல பெரும்பாலான பிராமணர்கள் நிர்வாகிகளாக இருக்கும் கட்சியாக பாஜக இருக்கிறது. தமிழ்நாடு பாஜக அதற்கு ஓர் நல்லுதாரணம். அனைவருமே சொல்லிவைத்தாற் போல பாஜகவில் ஐக்கியமாகி நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கின்றனர். ஆனால் இதனை ஒவ்வொரு முறையும் பாஜக மறுக்கிறது. தாங்கள் எல்லோருக்குமானவர்கள் தான் என விளக்கமளிக்கிறது. ஆனாலும் அதன் செயல்பாடுகளில் அந்த மாற்றம் ஏற்படவே இல்லை என்கின்றனர் குற்றஞ்சாட்டுபவர்கள். இச்சூழலில் உபி துணை முதல்வர் இதுகுறித்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறவிருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் தினேஷ் சர்மா, "நான் எங்கு சென்றாலும் பிராமண சாதி குறித்த கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பாஜகவின் தொலைநோக்கு பார்வை அனைவரையும் உள்ளடக்கியது. அனைவருக்குமான வளர்ச்சியை தான் பாஜக விரும்புகிறது. இதில் பிராமணர், குஜ்ஜார், ஜாட் என்ற வேறுபாடெல்லாம் பாஜக பார்ப்பதில்லை. அதன் காரணமாகவே பாஜகவுக்கு எல்லா சாதியினரும் ஆதரவு தருகின்றனர்.
என்னை பிராமணர் என்று அடையாளப்படுத்துகிறார்கள். அதை நான் மறுக்கவுமில்லை. மறைக்கவுமில்லை. நான் பிராமணன் தான். பிராமணன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு பிராமணரின் வேலை, அடுத்தவரின் மகிழ்வில் மகிழ்ச்சி காண்பதே. பிராமின் என்பது சாதியல்ல. அது ஒரு உயர்ந்த வாழ்க்கை முறை. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனுக்கான நற்பலன்கள் கிடைக்க பூஜைகள் செய்பவர்கள் தான் பிராமணர்கள். இது என்னுடைய பார்வை மட்டுமல்ல. நம் நாட்டு பிரதமர் மோடியின் பார்வையும் இதுவே” என்றார். இவரது பேச்சு உபி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.