சுற்றுப்பயணம் - பொதுக்கூட்டம் - ஓபிஎஸ் விறுவிறு
ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் அணியின் கோவை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் . அவர் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் ,ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ’’ ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவே உண்மையானது . எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக என்பது பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருக்கிறது’’ என்று விமர்சித்துள்ளார்
அவர் மேலும் பேசியபோது, ’’கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் அதிமுக படு தோல்வி அடைந்தது. இதனால் கோவை மாநகராட்சியில் அதிமுகவின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடிவு செய்து இருக்கிறோம் . கோவை முழுவதும் எனது தலைமையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சைக்கிள் பேரணி நடத்தி கட்சியை பலப்படுத்த இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ’’செப்டம்பர் மாதத்தில் ஓபிஎஸ் தலைமையில் கோவை வஉசி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். அதற்கு முன்னதாக ஓபிஎஸ் வரும் 20ஆம் தேதி மேல் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்’’என்றார்.