பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட இபிஎஸ்

 
ep

ஒற்றைத் தலைமை பிரச்சனையை முதலில் கையில் எடுத்தது எடப்பாடி பழனிச்சாமி தான் என்றாலும் அதன் பின்னர் அவர் அமைதியாகிவிட்டார். ஆனால்,  ஓ. பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை விவகாரத்தால் ரொம்பவே சூடாகி தனது ஆதரவாளர்களிடம் கூட்டம் ஆலோசனை கூட்டம், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை என்று  அதிரடியாக செயல்பட்டார்.

 இதனால் அதிர்ச்சியான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.   ஒற்றைத் தலைமை பேச்சை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி அதுகுறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில்,  அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் என்ன நடக்கிறது என்னென்ன முயற்சிகள் நடக்கிறது என்பதை அறிந்த பன்னீர்செல்வம் ஆவேசமாகி,  இதுவரைக்கும் அதிமுகவில் என்ன நடந்தது? தனக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையிலான உறவு குறித்து  எல்லாவற்றையும் வெளிப்படையாக  போட்டு உடைத்தார்.

ep

 மேற்கொண்டு பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என்பதற்காக எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார்.   இந்த நிலையில் தான் சேலத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வந்து அவரும் தன் பங்கிற்கு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 இது குறித்து கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருப்பதாவது:    ’’பொதுக்குழு கூட்டம் 23ம் தேதி கூடவிருக்கும் நிலையில் அந்த பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க தீர்மான குழு போடப்பட்டது.  இந்த தீர்மான குழுவினர் தலைமை கழகத்தில் கூடி தீர்மானங்கள் குறித்து தயாரித்து வந்தனர்.   அதிமுகவின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்பதும் ஒரு தீர்மானமாக அக்கூட்டத்தில் குழுவினர் விவாதித்தனர்.

 இந்தத் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.   இருவரும் அதை படித்துவிட்டு ஒப்புதல் தந்த பின்னரே தீர்மானம் புத்தகமாக தயார் செய்யப்படும் .   தீர்மானத்தில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால்  எடப்பாடி பழனிச்சாமி ,பன்னீர்செல்வம் இருவரும் செய்துகொள்ள முடியும்.   அந்த வகையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக சேலத்திற்கு சென்றுவிட்டார்.  ஆனால் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் அமைதியாக  இலருக்காமல் தலைமைக் கழகத்திற்கு வந்து தேவையில்லாத கருத்துக்களை வெளியிட்டதால் தான் பிரச்சனை வளர்ந்து விட்டது.   இதனால் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.   அதனால்தான் சேலத்தில் இருந்த அவர் சென்னைக்கு வந்திருக்கிறார்.  இதனால் தான் பிரச்சனை மேலும் சூடாகி விட்டது’’என்கிறார்.