காலம் கனிந்தது..ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மெகா கூட்டணி...
எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பது டெண்டர் படை தான் எங்களிடம் இருப்பது தொண்டர் படை என்று முழக்கம் எழுப்பி இருக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். மேலும், ஓபிஎஸ் ஆட்சிக்கு வந்ததும் கூவத்தூரில் என்ன நடந்தது என்பது குறித்து தனி கமிஷன் அமைத்து அனைவரையும் விசாரணை நடத்தி அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்.
அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார் ஓபிஎஸ். இந்த கூட்டத்தில் பேசிய மருது அழகுராஜ், நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் கிடைத்த நற்காலியை உரியவரிடம் ஒப்படைத்தவர் ஓபிஎஸ். இரண்டு முறை தன் பதவியை ஓபிஎஸ் இடம் வழங்கி ஜெயலலிதா அடையாளம் காட்டிவிட்டார் என்றார்.
மனோஜ் பாண்டியன் பேசியபோது, அரைகுறை சட்ட வல்லுனர்களை வைத்துக்கொண்டு ஒற்றை தலைமை என சொல்லி வருகின்றார்கள். அதிமுகவை பிடித்திருக்கும் நோய்தான் எடப்பாடி. அதற்கான மருந்து தான் ஓபிஎஸ். முன்வைத்த காலை பின் வைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் . எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்ளது டெண்டர் படை தான் எங்களிடம் உள்ளது தொண்டர் படை என்றவர்,
பத்தாண்டு காலம் சம்பாதிப்பவர்கள் உங்களிடம் உள்ளார்கள். எங்களிடம் இருப்பவர்கள் சுயநலம் இல்லாத பாடுபடும் போராடும் தொண்டர்கள். ஓபிஎஸ் ஆட்சிக்கு வந்ததும் கூவத்தூரில் என்ன நடந்தது என்பது குறித்து தனி கமிஷன் வைத்து விசாரணை நடத்தி அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
ஜேசிடி பிரபாகர் பேசியபோது, நான்கு பணக்காரர்களின் கையில் அதிமுக சிக்கிவிடக்கூடாது . அதற்காகத்தான் ஓபிஎஸ் போராடிக் கொண்டிருக்கிறார்.
ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்க அமித்ஷா முன்வந்த போது ஓபிஎஸ் மகன் என்பதால் தடுத்ததை கூட ஓபிஎஸ் பொறுத்துக் கொண்டார். ஆனால் நான்கு பணக்காரர்கள் கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்காகவா தொண்டர்கள் சிறை சென்றார்கள் குடும்பத்தை இழந்தார்கள் என்பதினை நினைத்துதான் அவர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார். விரைவில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மெகா கூட்டணி உருவாகும் . அதற்கான காலம் கந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.