’’ஏற்கனவே வயிறே சரியில்லை! இப்ப இந்த குப்பையை வேற சாப்பிடணுமா? தலையெழுத்து!’’
ஏற்கனவே மாநில சுயாட்சி, கச்சத்தீவு, நீட் ஒழிப்புன்னு ஏகப்பட்ட குப்பைகளை சாப்பிட்டு வயிறே சரியில்லை. இப்ப இந்த குப்பையை வேறே சாப்பிடணுமா? தலையெழுத்து! - பெரியார் வழியில் தனித்தமிழ்நாடு கேட்போம் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சொன்னதுக்கு துக்ளக் வெளியிட்டிருக்கும் அட்டைப்பட கார்ட்டூன் இது.
நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா உரையாற்றிய போது, மத்திய அரசு மாநில சுயாட்சியை தராவிட்டால் பெரியார் வழியில் தனித்தமிழ்நாடு கோருவோம் என்றார்.
அவர் அதுகுறித்து, ‘’இன்றைக்கு மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டியதாக இருக்கிறது. எவ்வளவோ பேசிவிட்டோம் எவ்வளவோ எழுதிவிட்டோம் .ஆனால் இன்றைக்கும் மாநில சுயாட்சியை கேட்க வேண்டியிருக்கிறது என்றால் நான் மெத்தப் பணிவோடு சொல்கிறேன். இந்த மேடையில் இருந்து சொல்கிறேன் பிரதமர் சொல்லுகிறார். எல்லா மாநிலங்களையும் ஒன்றாக நாங்கள் பார்க்கிறோம் . அமித்ஷா சொல்கிறார் ஒருமைப்பாடு வேண்டுமென்றால் இந்திக்கு வாருங்கள் என்று. நான் பழைய வரலாற்று நிகழ்வுகளை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்கிற திமிரோடு பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது . ஆனால் எங்களுடைய தத்துவத்தின் பிதாமகனாக இருக்கின்ற பெரியார் சாகிற வரை சுதந்திர தனித் தமிழ்நாடு கேட்டார் . அவர் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு செப்டம்பர் 17ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் அன்று விடுதலையில் ஒரு அறிக்கை எழுதினார்.
அந்த அறிக்கையில், ’’இந்தியாவில் இருக்கின்ற வரை இந்து மதம் நம்மை சூத்திரன் ஆக வைத்திருக்கும். இந்தியாவில் இருக்கின்ற வரை இந்து மதம் நம்மை பஞ்சமானாக வைத்திருக்கும். அது மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும்வரை தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது. உத்தியோகத்தில் பங்கு கிடைக்காது. எந்த ஏற்றமும் இருக்காது. எனவே நான் முடிவு செய்து விட்டேன்... இன்றைக்கு கலைஞர் முதலமைச்சராக இருக்கிறார். திராவிட முன்னேற்ற கழகம் இதனை ஏற்றுக் கொள்ளாது . அவர்கள் தங்களை மாநில சுயாட்சி என்று சுருக்கி கொண்டார்கள் என்று குறிப்பிட்டு விட்டு , கடைசியாக இப்படி முடிக்கிறார்... திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை சுருக்கிக்கொண்டது மாநில சுயாட்சியோடு. ஆனால் நான் சொல்கிறேன்.. பிரிவினை வேண்டும் தனித்தமிழ்நாடு வேண்டும். அதற்காக பாடுபடுவதும் போராடுவதும் ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமானதாகும். இளைஞர்களே! மாணவர்களே! முன் வாருங்கள்... சுதந்திர தமிழ்நாடு என்று பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள். சுதந்திரம் தமிழ்நாடு தான். நம்முடைய கடைசி லட்சியம் என்று சொன்னார் பெரியார்.
பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டிற்காக சற்றே விலகி ’இந்தியா வாழ்கை’ என்று சொன்னோம். இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும், இந்திய பிரதமருக்கும் மெத்த பணிவன்போடு சொல்லிக் கொள்கிறேன்... உங்களைப் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்... இந்த மேடையில் என்னுடைய தலைவரை வைத்துக்கொண்டு கேட்கிறேன்... அண்ணா வழியில் ஆட்சி செய்கிறார் எங்கள் முதலமைச்சர். நாங்கள் அந்த வழியில் தான் பயணிக்க ஆசைப்படுகிறோம் . எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்’’என்றார்.
ஆ. ராசா அப்படி பேசியதற்கு பதிலடியாக பாஜக சட்டமன்ற குழு துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், ’’தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும்படி நாங்களும் கூட கேட்போம்’’என்றார்.
இந்த நிலையில் ஆ.ராசாவின் பேச்சு குறித்து துக்ளக் இதழின் அட்டைப்பட கார்ட்டூனில், ’’ஏற்கனவே மாநில சுயாட்சி, கச்சத்தீவு, நீட் ஒழிப்புன்னு ஏகப்பட்ட குப்பைகளை சாப்பிட்டு வயிறே சரியில்லை. இப்ப இந்த குப்பையை வேறே சாப்பிடணுமா? தலையெழுத்து!’’என்று இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது மாதிரி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது.