பீகாரில் பா.ஜ.க.வில் இணையும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள்.. மறைமுகமாக பா.ஜ.க.வை தாக்கிய முகேஷ் சஹானி

 
முகேஷ் சஹானி

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விகாஷீல் இன்சான் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பா.ஜ.க.வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். 

பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி விகாஷீல் இன்சான் கட்சி. முகேஷ் சஹானி 2018ம் ஆண்டில் விகாஷீல் இன்சான் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய சிறிது நாட்களிலேயே ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் முகேஷ் சஹானி இணைந்தார். ஆனால், 2020ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தேஜஸ்வி யாதவுடன் சீட் பகிர்வு தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்ததால் முகேஷ் சஹானி அந்த கூட்டணியிலிருந்து விலகினார். 

விகாஷீல் இன்சான் கட்சி

2020ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விகாஷீல் இன்சான் கட்சி போட்டியிட்டது. அந்த தேர்தலில் விகாஷீல் இன்சான் கட்சி 11 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் 4 தொகுதியில் மட்டுமே விகாஷீல் இன்சான் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தற்போது விகாஷீல் இன்சான் கட்சி எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் தாங்கள் பா.ஜ.க.வில் இணைய விரும்புவதாக அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர். இது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.

இது தொடர்பாக விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி கூறுகையில், நேற்று வரை என்னுடன் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். எங்கள் 3 எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் (பா.ஜ.க.) மொத்த (எம்.எல்.ஏ.) எண்ணிக்கையை 77ஆக மாற்றியுள்ளனர். அவர்கள் (பா.ஜ.க.) பீகாரின் நம்பர் 1 கட்சியாக ஆனார்கள். அவர்களை நான் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.