அந்த 13 திமுக அமைச்சர்களும் விரைவில் சிறைக்கு செல்வார்கள் - அடித்துச்சொல்லும் சிவி.சண்முகம்
திமுக அமைச்சர்கள் 13 பேர் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அடித்துச் சொல்கிறார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையேற்றார். மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிவி சண்முகம், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நாம் திமுக அரசுக்கு இன்னொரு செய்தி சொல்கிறோம். இன்றைக்கு அதிமுகவில் மூன்று முறை முதல்வரை பதவியை அனுபவித்து விட்டு கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்று விட்டு அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து கொண்டு அதிமுகவை முடக்கி விடலாம் என்று நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது என்றார்
ஆவேசத்துடன்.
தொடர்ந்து பேசிய சிவி சண்முகம், தொண்டர்களை நம்பி இருக்கிறேன் என்று கூறி வருகிறார் ஓபிஎஸ் . ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். அவர் பக்கம் ரவுடிகளும் குண்டர்களுமே உள்ளார்கள். தொண்டர்கள் உள்ள வரைக்கும் யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்றார். மேலும், 100 பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. 100 துரோகிகளை அதிமுக பார்த்துவிட்டது.
பன்னீர்செல்வம் சின்னத்தையும் கட்சியையும் உடைக்க நினைத்தவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.
இதை எடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடந்து வருவது குறித்து ஆவேசப்பட்ட சிவி சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்து விடுவோமா? திமுகவில் 13 அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. விரைவில் அந்த 13 அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராகவே இருக்கிறது. சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம் என்றார்.