இது எடப்பாடிக்கு மிகவும் பொருத்தமான சிச்சுவேஷன் சாங்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி வகித்த காலத்தில் நெடுஞ்சாலை துறையில் 4800 கோடி ரூபாய் டென்டரை தனது உறவினர்கள் , நண்பர்களுக்கு வழங்கினார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார். இந்த விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மேலும், விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் இருந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு வழக்கறிஞர் அண்மையில் முறையிட்டிருந்தார். இதன் பின்னரே இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது . அப்போது இந்த வழக்கில் வாதாடுவதற்கு அவகாசம் வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.
இதன்பின்னர், ஆர். எஸ் .பாரதி நேற்று இந்த தாக்கல் செய்திருந்த கூடுதல் மனுவில், ஒப்பந்த பணிகளுக்கு அதிக விலை வழங்கியிருப்பதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது . உலக வங்கி வழிகாட்டி விதிமுறைகளை மீறி தனது உறவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி டெண்டர் வழங்கியிருக்கிறார் . ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற எடப்பாடி பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது . தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டியதில்லை என்று சொன்ன உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு குறித்து, அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. சி. பழனிச்சாமி, ‘’ நியாயங்களின் சமாதிகளை நீங்கள் கண்டதுண்டா? எங்கள் நாட்டில் அவற்றை நீதிமன்றங்கள் என்று அழைப்போம்?! சிற்பி பாலசுப்பிரமணியம் என்ற கவிஞர் 1960களில் எழுதிய பாடல் இன்றைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் பொருத்தமான பாடல்’’என்று குறிப்பிட்டு இருக்கிறார்.