திரெளபதி முர்மு ஒரு சர்க்கஸ் புலி- திருமாவளவன்
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு ஒரு சர்க்கஸ் புலி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதன் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார். மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் 1997ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதன் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன நேரில் வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “மேலவளவு கிராம ஆதிதிராவிட மக்களுக்கு சுடுகாட்டிற்கு பாதை இல்லை என்பது வருத்தத்துக்குரியது. இதற்காக பிரத்தியேக முறையில் தமிழக முதல்வரை சந்தித்து நிச்சயம் கோரிக்கை வைப்பேன்.பாரதிய ஜனதா கட்சி சார்பில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்டி வைக்கப்படும் ஒரு சர்க்கஸ் புலி. காட்டு யானை அல்ல பாகன் கையில் சிக்கிய யானை போன்று பாரதிய ஜனதா கட்சி சொல்லும் திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்து கையெழுத்து இடுபவர்” எனக் கூறினார்.