இப்போதாவது ஞானம் வந்ததே -காயத்ரிக்கு சொல்லும் திருமா

 
க்ய்

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் திமுகவிலோ அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிலே இணையப் போவதாக தகவல் பரவி வந்த நிலையில்,  இப்போதாவது ஞானம் வந்ததே.. வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

 தமிழக பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருந்து வந்தார் நடிகை காயத்ரி ரகுராம்.  தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டது முதல் அவருக்கும் இவருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது.  தொடர்ந்து அண்ணாமலையின் தலைமையை விமர்சித்து வந்தார்.   

க்

அண்ணாமலையையும் அவரது ஆதரவாளர்களையும் விமர்சித்து வந்த நிலையில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் காயத்ரி ரகுராம்.   அதன் பின்னர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு காயத்ரி ரகுராமுக்கு வழங்கப்பட்டது.  அதன் பின்னரும் தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.

 முன்னாள் தமிழக பாஜகவின் தலைவர் எல். முருகன் முருகனின் ஆதரவாளர் காயத்ரி ரகுராம் என்றும்,  முருகன் காயத்ரி ரகுராம் மூலமாக அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று திருச்சி சூர்யா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

  கட்சி வரம்பை மீறி திமுக பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் காயத்ரி ரகுராம் என்று அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டி வந்த இந்த நிலையில் திருச்சி சூர்யா- டெய்சி சரண் ஆடியோ விவகாரத்தில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பும் பறிக்கப்பட்டு அந்த பதவி இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்கப்பட்டது.

 இதனால் புலம்பி கொண்டிருந்த காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகி இருக்கிறார்.   அதன் பின்னரும் அண்ணாமலை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் . பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி வருகிறார்.   இதற்கிடையில் காயத்ரி ரகுராம் திமுகவிலோ அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிலோ இணைய போவதாக தகவல் பரவியது.  

 இந்த நிலையில் ,  விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன்,   ‘’பாஜக பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம்.  இப்போதாவது ஞானம் வந்ததே. பாராட்டுகள்!  இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக’’என்று தெரிவித்திருக்கிறார்.